free counters

Friday, October 21, 2011

பரவுகிறது கூடங்குளம் போராட்டம்


ஜினியர் விகடன் 22/10/11 இதழிலிருந்து

கூடங்குளம் போராட்டம் உச்சக்கட்டமாக வெடித்துள்ள நிலையில்... அதன் தொடர்ச்​சியாக கல்பாக்கத்திலும் போராட்டம் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. மருத்துவர் புகழேந்தியின் தலைமையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை நோட்டீஸாக அச்சடித்து அந்த நிர்வாகத்துக்கும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் வழங்கி இருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, கல்பாக்கம் அணு சக்தித் துறையினர் பதில் அளிக்கும் விதமாக, கடந்த 15.10.2011 அன்று அனைத்துத் தமிழ் நாளிதழ்களிலும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.
'அந்த பதில்கள் அனைத்தும் தவறானவை... ஒன்றுக்கு ஒன்று முரணானவை’ என்று சொல்லும் புகழேந்தி, அது குறித்து சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
''அணு மின் நிலையத்தார், 'சுனாமியைக் கணக்கில்​கொண்டே அணு உலைகள் கட்டப்பட்டு உள்ளன’ என்று சொல்லி இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான வாதம். எப்படியெனில், 1999-ல் வெளியிடப்பட்ட 'சயின்ஸ் ஆஃப் சுனாமி ஹசார்ட்’ இதழின் (தொகுப்பு 17; எண்.3, பக்கம் 167-172) ஆய்வுக் கட்டுரையில் புவியியல் ஆராய்ச்சியாளர்களான டாட் எஸ். மூர்த்தி மற்றும் அருண் பபட் இருவரும், 'எதிர்காலத்தில் சுனாமி பாதிப்பு கல்பாக்கத்தில் இருக்கலாம்’ என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால், 2005-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, கல்பாக்க அணு மின் நிலையத்தின் நிலையப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் சுகாதார இயற்பியல் துறை முன்னாள் அதிகாரியான எல்.வி.கிருஷ்ணன், ஓர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 'சுனாமியை நாங்கள் கணக்கில்கொள்ளவில்லை’ என்று தெளிவாகவே சொல்லி இருக்கிறார்.
இரண்டாவதாக, 'கல்பாக்கம் பகுதி நிலநடுக்கப் பகுதி 3-ல் உள்ளது என்று இந்தியப் புவியியல் துறையால் வரையறுக்கப்பட்டு உள்ளது’ என்கிறார்கள். இந்திய அணு சக்திக் கழகத்தால் செப்டம்பர் 28, 2011-ல் வெளியிட்ட விழிப்பு உணர்வு அறிக்கை பக்கம் 8-ல் உள்ள வரைபடத்தில், கல்பாக்கம் நிலநடுக்கப் பகுதி (ஆபத்துக் குறைவான) 2-ல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு? அதே போல இந்திய அணு சக்தித் துறை, ஜெய்தாபூர் அணு மின் நிலையம் நிலநடுக்கப் பகுதி 3-ல் இருப்பதாகச் சொல்லியது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், அது ஆபத்தான நிலநடுக்கப் பகுதி (ஆபத்தான) 4-ல் இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் அணு மின் நிர்வாகத்தார்?
மூன்றாவதாக, 'கல்பாக்கம் அணு மின் நிலையக் கடற்கரைப் பகுதியில் எந்த விதமான கடல் அரிப்பும் ஏற்படவில்லை. மேலும், பாறைகளின் மேல் அடித்தளம் அமைத்து அணு உலை கட்டப்பட்டு உள்ளதால், கடல் அரிப்பு ஏற்பட்டாலும் பாதிக்க வாய்ப்பு இல்லை’ என்று கூறியுள்ளார்கள். அதுவும் தவறு. 'பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு’வின் தலைவர் மருத்துவர் ரமேஷ் புவியியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டி கல்பாக்கக் கடற்கரை 'மண் அரிப்பு ஏற்படும் பகுதி’ (ணிக்ஷீஷீsவீஷீஸீணீறீ சிஷீணீst) என்றும் இங்கு ஆண்டுக்கு 55 செ.மீ. மண் அரிப்பு ஏற்படுவதாகவும் சொன்னார். அதை நிர்வாகம் மறுக்க முடியுமா?
நான்காவதாக, 'பி.எஃப்.பி.ஆர். எனும் அதிவேக ஈணுலையில் உருவாகும் திரவக் கழிவுகளின் அளவுகள் மிக மிகஅதிக​ மாகக் கூறப்பட்டுஉள்ளது’ என்கிறது அணு மின் நிலைய நிர்வாகம். இது​வும் தவறானதே. முதலில் திரவக் கழிவுகள் கடலில் கலக்கவில்லை என்றும் அதனால் மீன் வளம் அழியாது என்றும் கூறிய நிர்வாகம், தற்போது திரவக் கழிவுகளின் அளவு மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகச் சொல்கிறது. அதிவேக ஈணுலையில் இருந்து, 'முதலாம் வகைக் கழிவுகள் ஒரு நாளைக்கு 94,000 லிட்டர் வரையிலும் கடலில் விடப்படும்’ என்று நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை (பக்கம் 5-21) கூறியது. இது பொய்யா?
ஐந்தாவதாக, அணு மின் நிலையங்கள் கல்பாக்கத்தில் துவங்குவதற்கு முன்னரே, கடற்கரை மணலில் ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியத்தின் அளவை அளந்ததாகக் கூறுகிறார்கள். இதுவும் தவறு. சுனாமிக்குப் பின் கதிர்வீச்சு அளவில் மாற்றம் இல்லை என்று கூறும் நிர்வாகம், அந்த அளவை ஏன் வெளியிடவில்லை? கடற்கரை மணலில் உள்ள ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியத்தின் அளவை மாவட்ட ஆட்சியர், பத்திரிகையாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் முன் அளந்து காட்ட நிர்வாகம் தயாரா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஐயம் தீர்க்கும் வண்ணம் விடை அளிப்பதே நியாயம். நிர்வாகம் அதைச் செய்யுமா?'' என்று கேட்கிறார் புகழேந்தி.
பொதுமக்களும் இதைத்தான் எதிர்பார்க்​கிறார்கள்.!
- ந.வினோத்குமார்

No comments:

Post a Comment