Saturday, October 1, 2011

junior vikadan அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

போராட்டங்கள் முடிவது இல்லை!
'வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!’
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
சிந்திக்கும் திறன் பெற்ற தமிழர் எல்லாம், சீர் தூக்கித் தெளிகின்ற செயல் வீரர் எல்லாம், எதிர்காலம் பற்றி எண்ணுகின்ற இளைஞர் எல்லாம், 'குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி’ மிக்கதுகொள்கின்ற தமிழ்ச் சகோதரியர் எல்லோருமே கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது என்றுதான் வாதிடு கின்றனர்.
ஒரு சிலர், 'இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேலை முடியும் தறுவாயில் மூடச்சொல்வது நியாயமா?’ எனக் கேட்கின்றனர். உண்மை என்ன தெரியுமா? 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழாவைக் கடுமையாக எதிர்த்து, பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகையைத் தடுத்தது முதல், இன்று வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 1989-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரியிலே துப்பாக்கிசூடு முதல் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 நாள் சாகும் வரை உண்ணாவிரதம் வரை எண்ணற்ற பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைப் பிரசாரங்கள் என எறும்புக் கூட்டம் போன்று இயங்கிக்கொண்டே இருந்தோம். எங்களை வெறும் துரும்பு என நினைத்த அரசுகள் ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்பட்டு எதேச்சதிகாரமாக,
தான்தோன்றித்தனமாக கூடங்குளம் திட்டத்தை எங்கள் மேல் திணித்தனர். ஒரு கருத்துக் கேட்பு கூட்டம்கூட நடத்தவில்லை. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். அப்போது தவறவிட்டு, இப்போது எங்கள் தவறு இது என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
ஏராளமான பொருட்செலவில், எல்லா உறவினர் களையும், நண்பர்களையும் அழைத்து, ஒரே மகளுக்கு ஒப்பற்ற திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறீர்கள். விடிந்ததும் மங்கள நிகழ்வு. விடிவதற்கு சற்று முன் மணமகனின் மருத்துவர், 'இந்தப் பையன் எய்ட்ஸ் நோயாளி’ எனும் தகவலைத் தருகிறார். என்ன செய்வீர்கள்? 'இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். இன்னும் ஓரிரு மணி நேரத்தில் திருமணம், போகிறது கழுதை’ என்று திருமணத்தை முடிப்பீர்களா? அல்லது உண்மையான தகப்பன், தாய் போன்று 'எத்தனை பொருள் இழப்பு வந்தாலும், என்னென்ன சிரமங்கள் எழுந்தாலும், என் மகளைப் பாழுங் கிணற்றுக்குள் தள்ள மாட்டேன்’ எனச் சொல்லித் திருமணத்தை முறிப்பீர்களா?
''ஐயகோ,  13,000 கோடி செலவு செய்து விட் டார்களே, எத்தனை நஷ்டம், எவ்வளவு இழப்பு'' என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். ஒரு தனிநபரால் இந்தியாவுக்கு  1 கோடியே 76 லட்சம் கோடி இழப்பாம். அதில் காங்கிரஸ் அரசின் மூத்த அமைச் சருக்குத் தொடர்பாம். கடலுக்குள் கால்வாய் வெட்டிக் கொள்ளை, காமன் வெல்த் விளையாட்டு கட்டடங்கள் கொள்ளை - இப்படி நாளரு கொள் ளையும், பொழுதொரு மோசடியுமாக நடக்கலாம் என்றால், கூடங்குளம் அணு மின் நிலையச் செலவு ஒரு பிரச்னையே அல்ல. கட்டப்பட்ட  கட்டடங்களை மக்களுக்கு உபயோகமான ஒரு திட்டத்துக்கு ஏற்புடையதாக மாற்றிக் கொள்ளலாம். புதிய தலைமைச் செயலகம், மருத்துவமனையானது போல!
வளரும் நாடாம்... மின்சாரம் வேண்டுமாம்! யார் வளர்கிறார்கள்? டாடாக்களும், பிர்லாக்களும், அம்பானிகளும், மிட்டல்களும்! அவர்களின் வளர்ச்சிக்காக, தமிழக மீனவனும் விவசாயியும் தம் தொழிலை இழக்க வேண்டுமா? தமிழ் மண்ணை விஷமாக்கி, தமிழ்க் கடலை நாசமாக்கி, நமது உணவுப் பாதுகாப்பைப் புதைத்து அழித்து, நமது சந்ததிகளின் எதிர்காலத்தைச் சுட்டுப் பொசுக்கி, தமிழர் வாழ்வைக் காவு கொடுக்க வேண்டுமா? இது என்ன வளர்ச்சி? இது நமக்கு வேண்டுமா?
60 கோடி இந்தியர்கள், வெறும் 20 ரூபாயோடு ஒரு நாளைக் கழிக்கிறார்கள். 40 கோடி இந்தியர்கள் ரயில் பாதைகளிலும், சாலையோரங்களிலும் காலைக்கடன்களை முடிக்கிறார்கள். தெரு நாய்களுக்கு இருக்கும் மாண்புகூட, இந்திய மக்களுக்கு இன்றளவும் இல்லை. இந்த லட்சணத்தில் மின்சாரம், வெங்காயம் என்று புளுகித் திரிகிறார்கள். 'சூப்பர் பவர்’ ஆக்குவதற்கு ஒரு கூட்டம், சந்திரனுக்கு ஆள் அனுப்ப இன்னொரு கூட்டம். இரண்டாம் பசுமைப் புரட்சிக்குத் தயாராகும் மற்றொரு கூட்டம் - இப்படி ஆள் ஆளுக்கு கதை அளக்கிறார்கள். உண்மை என்ன? அதிகமாக அணுகுண்டுகள் தயாரிப்பதும், அமைச்சர்களுக்குக் காவடி தூக்குவதும், அவர்களின் கைக்கூலியாகி சீனா, பாகிஸ்தானை அடிப்பதும் எனத் திட்டங்கள் அங்கம் அங்கமாக அரங்கேறுகின்றன.
அணு சக்தித் துறையையும், அசுர பலம் கொண்ட ராணுவத்தையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கப்போகும் இந்தியா, அம்மாவாக இருக்க மாட்டாள், அரக்கியாக மாறிவிடுவாள். தன் ஈனப் பசிக்கு இரையாக தான் ஈன்றெடுத்த மக்களையே ரத்தம் சொட்டச் சொட்டக் கடித்து விழுங்கி, கபளீகரம் செய்வாள்.
விழித்துக்கொண்ட மலையாளிகளும், வங்காளி களும் அவர்கள் மண்ணில் அணு மின் நிலையமும் வேண்டாம், அணு குண்டுத் தொழிற்சாலைகளும் வேண்டாம் என உறுதிபடச் சொல்கின்றனர். தடுக்கின்றனர். ஆனால் தமிழன்? வாய்ச் சொல் வீரர்களையும், கடிதம் எழுதுபவர்களையும், சினிமா நடிகர்களையும் நம்பிக்கொண்டு நடுத் தெருவில் நிற்கிறான்!
மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சாதாரண மக்களுக்காக சாதாரண மக்களால் நடத்தப்படும் சாதாரண மக்களின் சாதாரண அகிம்சைப் போராட்டமாக கூடங்குளம் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. சாதாரண இந்தியர்களின், தமிழர்களின் உயிட்களுக்கும் விலை இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது, அவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான் போராட் டத்தின் அடிப்படை அனுமானம்.
'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்பதுதான் போராட்டத்தின் யுத்த தந்திரம். வள்ளுவர்தான் எங்கள் வழிகாட்டி. காந்தி எனும் சாந்தமூர்த்தி எங்கள் தளபதி. பெண்கள்தான் எங்கள் தலைவர்கள். பிள்ளைகள்தான் எங்கள் தூண்டுதல்கள். அணு உலைகள் அற்ற, அணு ஆயுதங்கள் அற்ற, அணுக் கழிவு எனும் அணு விஷம் அற்ற அமைதியான பாதுகாப்பான தமிழகமே எங்கள் இலக்கு. அதுவரை அணு ஆட்டம் தொடரும். புரட்சிக் கவிஞர் சொல்வது போல,
'நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு
- தமிழா
நாம் தமிழர் நம் திறத்துக் கெவர் ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு
- நாம்
தீர்த்துக்கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!’
போராட்டம் தொடர்கிறது...

No comments:

Post a Comment