http://www.tamilpaper.net/?p=4115
இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டஅணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களைக் குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்களிலிருந்து தண்ணீர் ஆலைக்குத் திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை. இந்நிலையில், இன்று நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.
அணு உலைகளின் நீடித்த ஆபத்துகளும் சரி, விபத்துகளினால் ஏற்படும் பெரும் அழிவுகளும் சரி, மிகக் குறைவானதாகவே அணுசக்தி ஆதரவாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. இதற்குப் பின்னணியில் அணுசக்தி மேலண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் பெரும்பணம் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் ‘லாபி’ அமைப்புகள் உலக நாடுகளெங்கிலும் செயல்பட்டு தங்களுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்கிக்கொள்கின்றன. மிகக் குறிப்பாக வளரும் நாடுகளை இவை குறிவைக்கின்றன. தனியாருடன் அணுஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவந்த இந்தியாவும் சமீப காலமாக மாறிவிட்டது.
மாறியபிறகு, அணு விபத்துகளின்போது மக்களுக்கு யார் உதவித்தொகை வழங்குவது என்பது குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கைகழுவிவிட்டு ஓடும் வசதியை கொண்டிருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு இது கொஞ்சம் சரி செய்யப்பட்டுள்ளது. (தற்போதுகூடங்குளம் திட்டம் இந்தச் சட்டத்துக்குள் அடங்காது என்று அரசு கைவிரித்துள்ளது).
தனியார்மயமாதல் தன்னளவில் ஒரு கெட்ட பொருளாதாரக் கொள்கையல்ல. இன்று உலகளவில் வெற்றிகரமான ஒரே பொருளாதார வகைமையாக அதுவே உள்ளது. ஆனால் தனியார்மயமாதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நன்மைபயக்கும்படி செய்வதே அரசின் முக்கியக் கடமை. அதைச் செய்யத் தவறும்போது இலாபம் மட்டுமே குறிக்கோளான தனியார் நிறுவனங்கள் கடற்கொள்ளைக்காரர்களைப்போல சூறையாடத் துவங்கிவிடுகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இயந்திரம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. இதில் இன்னொரு உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். இதுவரை அணுசக்தித் துறையில் இலாபம் பார்த்து வந்த சீமன்ஸ் எனும் தனியார் நிறுவனம் இனிமேல் அந்தத் துறையில் தான் செயல்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. இலாபத்தை விட மனித இனத்தின் மீது அது காட்டியிருக்கும் அக்கறை பாராட்டத் தகுந்தது. ஆனால் நம் அரசோ பழைய அணுசக்தி தயாரிப்பு முறைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது.
நம் தேவையில் வெறும் 2.7% மின்சாரத்தைத் தயாரிக்கும் அணு உலைகளினால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இவற்றுக்குப் பதிலாக மாற்று மின்சக்தி உற்பத்தியை இந்தியா ஊக்குவிக்கவேண்டும். நமது மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய பலஆலோசனைகளை பன்னாட்டு சக்தி நிறுவனம் (International Energy Agency) வழங்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50%க்கும்மேல் வீணாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில் தேவயற்ற மானியங்களும், ஊழல்வழி இலவச மின்சாரம் பெறுவதும் உள்ளது. ஆக நாம் நமது மின்சார விநியோகத் திறனை மேம்படுத்துவது முதலில் அவசியம். ஆனால் அது குறித்து இங்கே யாரும் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.ஒரே ப்ராஜெக்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்கிற அரசியல்தானே இது? IEA முன்வைக்கும் ஆலோசனைகளில் மிக முக்கியமானது ஒவ்வொருபகுதிக்குமான மின்சாரத் தேவைகளை அந்தந்த பகுதிகளிலேயே உற்பத்தி செய்ய முயலவேண்டுமென்பதே. தற்போதைய மாற்று மின் உற்பத்திமுறைகளைக் கொண்டு இதை நிச்சயம் சாத்தியமாக்கலாம்.
இந்தியா தன் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஐ.இ.ஏ முன்வைக்கும் சில முக்கியப் பரிந்துரைகளைப் பார்ப்போம்.
- மின்சக்தி தயாரிப்பை பயன்பாட்டிடத்துக்கு அருகில் கொண்டு செல்வது. இதன்மூலம் சிறியதாக பல திட்டங்களைச்செய்து அந்தந்த பகுதிகளின் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும்.
- மின்சக்தி மானியங்கள் அதற்குத் தகுதியான மக்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும்.
- மின் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் பெரும் இழப்பைத் தவிர்க்க வேண்டும்.
- மின்சக்தி திருடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.
- சூரிய சக்திமூலம் வீட்டுத் தேவைகளுக்கு மின்சக்தி தயாரிப்பு பரவலாக்கப்படவேண்டும்.
காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிப்பில் இந்தியா முதலிடத்திலுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி விழும் பகுதிகள் இந்தியாவில் ஏராளமாயக உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காத இவற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு தலைமுறைகள் தாண்டி பேராபத்துக்களை உருவாக்கும் அணு ஆலைகளை அமைக்க நம் அரசுகள் முடிவெடுப்பதன் பின்னணியில் ஒரே ஒரு மனநிலைதான்தென்படுகிறது. அது மக்களின் உயிரையோ, வாழ்க்கை தரத்தையோ கிஞ்சித்தும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.
கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக டாக்டர் உதயகுமார் முன்வைத்திருக்கும் 13 முக்கிய கருத்துக்கள் இவை
- கூடங்குளம் அணு உலைகள் அமைக்க ஜனநாயக முறைகள் கையாளப்படவில்லை. அணு உலையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களோ, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டங்களோ தீட்டப்படவில்லை அல்லது அவை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.
- தமிழக அரசு உலைக்கும் 2முதல் 5 கி,மீ வரை உள்ள இடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக வரையறுத்துள்ளது.( G.O. 828, 29.4.1991 – Public Works Department). ஆனால் கூடங்குளம் அதிகாரிகள் மக்களிடம் வாய்மொழியாக அப்படி எதுவும் இல்லை என்று தன்னிச்சையாக பதிலளிக்கிறார்கள். இது அணு உலை ஆரம்பித்த பின்னர் தங்கள் வாழ்விடங்களிடமிருந்து மக்களை அப்புறப்படுத்தும் என்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது.
- உலைக்கு 30 கி.மீ சுற்றளவில் பத்து இலட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விபத்து நேர்கையில் இந்தப் பெரிய மக்கள்திரளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமற்றது.
- அணு உலைகளை குளிரூட்ட பயன்படுத்தப்படும் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படவுள்ளது. அது கடல் நீரிலும், மீன்களிலும் கதிரியக்கத்தைசெலுத்தும். மீனவர்கள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் (கன்னியாகுமரி, முட்டம் போன்ற அழகிய கடற்கரை சுற்றுலாத் தலங்கள் நேரடியாக பாதிக்கப்படும். குளச்சல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அதே கடல்வழியேயே அடையக்கூடியவை).
- ஏற்கெனவே தோரியம் பிரித்தெடுக்கும் (மணவாளக்குறிச்சி மணல் கம்பெனி) பணியில் இருந்தவர்களில் பலரும் புற்று நோயால்அவதிப்படுகின்றனர். இன்னொரு சோகம் இங்கே வேண்டாம்.
- கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களின் தரங்கள் அங்கே வேலைபார்த்தவர்களாலேயே தரமற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. (இவை வட இந்திய ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்).
- அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் காட்டிலாகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடங்குளத்தில் 3-6 அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளார்.ஆக 1-2ம் சூழலுக்கு பாதுகாப்பானதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
- பலரும் இந்தப் பகுதியில் எந்த இயற்கை சீற்றமும் வராது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும்? 2004ல் இதேஅணு உலையின் கட்டுமானங்கள் சுனாமியால் இடிக்கப்பட்டன. மார்ச்19, 2006ல் இங்கே நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2011ல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (ஃபுக்குஷிமாவில் இயற்கை சீர்றம் குறித்த இத்தகைய மேம்போக்கான நம்பிக்கைகள் திட்டத் தோல்விகளை உருவாக்கியுள்ளதை சைன்ஸ் பத்திரிகை பதிவு செய்கிறது. உண்மையில் உலகின் எந்த பகுதியில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் குறிக்கும் எந்த அறிவியலும் உருவாக்கப்படவில்லை).
- இந்தியப் பிரதமரே நம் நாட்டின் அனுசக்தி ஆலைகள் தீவிரவாதிகளின் டார்கெட்டாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
- ரஷ்ய நிறுவனத்துடன் விபத்து உதவித்தொகை வழங்குவது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஷ்யா தனக்கும் இந்தியஅரசுக்கும் 2008ல் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கை தற்போதைய NPCIL சட்டத்தை மிஞ்சியதாக வாதாடிக்கொண்டிருக்கிறது.
- கூடங்குளம் அணு ஆலையின் கட்டுமானச் செலவு குறித்து பல்வேறு முரணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவை இந்த திட்டம் யாருடைய இலாபத்துக்கு செய்யப்படுகின்றன எனும் கேள்வியை எழுப்புகின்றன.
- ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு உலக அளவில் அணுசக்தி குறித்த மாற்று அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணுசக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன.
- இந்திய அரசு அணு சக்தி மீது மதிகெட்ட ஈடுபாடுகொண்டுள்ளது. அதன் அணுத் திட்டங்களும் செயல்பாடுகளும் அதீத இரகசியத்தன்மையுள்ளவை. மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்கவே மறுக்கிறது அரசு. இதெல்லாம் உண்மையில் இந்திய மக்களின் இலாபத்துக்காகவாஅல்லது அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளின் இலாபங்களுக்கா? நம் நாட்டின் (இன்றைய) நாளைய மக்களின் உயிரைவிடவும் இலாபம் மேலானதா?
இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டஅணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களைக் குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்களிலிருந்து தண்ணீர் ஆலைக்குத் திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!
அணுசக்தி நம் நாட்டின் முதன்மையான தேர்வாக இருக்கக் கூடாது. மாற்று மின்சக்தி தொழில்நுட்பங்கள் மிக விரைவாக உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு முட்டாள்தனமான தேர்வு. அணுசக்தி உற்பத்தி மக்கள் நெருக்கமே இல்லாத இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் இயன்றவரை தவிர்க்கப்படவேண்டும். ஃபுக்குஷிமாவுக்குப் பின் நாம் நமது அணுசக்தி திட்டங்களை சீர்தூக்கி சரி செய்ய வேண்டும். நம்அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு தர நிலைகளை உலகளாவிய தன்னார்வ நிறுவனங்களைக் கொன்டு மதிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஒரு வெளிப்படையான அணு சக்தி அணுகுமுறை நமக்கு உடனடியாகத் தேவை.
கூடங்குளத்தை பொறுத்தவரை அங்கே அணு உலை அமைப்பது மாற்றியமைக்கப்பட்டு அதை மாற்று மின் உற்பத்தி நிலையமாகவோ கடலலையிலிருந்து மின்சாரம் உருவாக்கும் திட்டமாகவோ மாற்றப்படவேண்டும். அல்லது வேறு மாற்றுத் திட்டங்களுக்காக அதை பயன்படுத்தவேண்டும். சென்னை தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாறப்போவதில்லையா? அதுபோல்.
கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல. அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே. இதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது மிக மிக அவசியமாகும்.
No comments:
Post a Comment