ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்
=+=
ஆனால் ஈழத்தமிழர் எங்கிருந்தாலும் தமிழக இலக்கிய பிரவாஹத்தை தொடர்ந்தே வந்திருக்கிறார்கள். அது அவர்களது இயல்பு என்பதும் தமிழகத்தில் எழும் சீரிய முயற்சிகளுக்கு தமிழகத்தார்களைவிட ஈழத்தமிழர்களே அதிக ஆர்வம் காட்டி, ஆதரவும் தந்துள்ளார்கள் என்பதும் எனக்கு எழுத்துப் பத்திரிகை காலத்திலிருந்து தெரிந்த விஷயம். அது வரலாறு. இப்போது இன்னொரு சான்றைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.
தமிழ்நாடு அரசோ, பண்டித உலகமோ, இலக்கிய உலகமோ, இந்த கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் அவருக்குத் தரவில்லை. இந்த நூலை வெளியிட்டுள்ள நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ஒரு தனி மனித ஆர்வமும் (எஸ்.ராமகிருஷ்ணன், கிரியா, சென்னை) Harvard University, Cambridge, Massachusetts-ம் தான். இதைப் புரிந்துகொள்ள ஒரு பழம் செய்தியை நினைவுப்படுத்திக்கொள்ளலாம். 1967-லோ என்னவோ, உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி, மகாதேவன் அவமானப்படுத்தப்பட்டார். இதற்குத் தலைமை தாங்கியவர், திராவிட அரசியல் சார்பு கொண்டவரும் தமிழ் பண்டிதருமான இலக்குவனார் என்பவர். பொதுவாகவே தமிழ் பண்டித உலகமே திராவிட அரசியல் வகுக்கும் அறிவார்த்த நிலைப்பாட்டை கேள்வியின்றி மேற்கொண்ட உலகம்தான். அதை கோஷமாகவே முன்வைக்கும் உலகம்தான். அதனால் இலக்குவனாரை மாத்திரம் இதற்கு இலக்காக்குவது தவறு.
அவரது ஆராய்ச்சி, இதுகாறும் அதிகம் கவனம் பெறாத ஆரம்பகாலக் கல்வெட்டுகளை மாத்திரமே களனாகக் கொண்டது. மிக நீண்ட கால நாகரிகமும், சரித்திரமும், இலக்கியப் பதிவுகளும் கொண்ட நாடுகளில் தமிழ்நாடும் நாகரிகமும் ஓன்று. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும், கல்லும் ஒரு நீண்ட வரலாற்றைக்கூறும். அவ்வரலாறு அதன் கட்டிடங்களிலும், கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. இலக்கியத்துக்கு முந்திய பதிவுகள் கல்வெட்டுகளில். கல்வெட்டுகள் இவ்வளவு பரவலாகவும், அதிக எண்ணிக்கையிலும் தென்னிந்தியாவில் பரவியிருப்பதுபோல் வேறு எங்கும் காணக்கிடைக்காது. அதிலும் தமிழ்நாட்டில் காணப்படுபவை கி.மு.மூன்றாம் நுற்றாண்டிலிருந்து தொடங்கும் வரலாறு கொண்டவை.
ஐராவதம் மகாதேவன் தன் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளவை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நுற்றாண்டு வரையான காலகட்டத்தில், மௌரிய சாம்ராஜ்யத்தின் காலத்தில், தெற்கு நோக்கிப் பயணத்தை தொடங்கிய ஜைனர்கள், பௌத்தர்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த பிராஹ்மி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள். இன்றைய தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தின் ஆரம்பங்கள் நாம் தெரிந்துள்ள கோவில் கல்வெட்டுகளோ, செப்புத்தகடுகளோ அல்ல. இவை பிந்திய வடிவங்கள்; சாசனங்கள். ஜைனர்கள் வாழ்ந்த மலைக்குகைகளில் சாசனங்களாகப் பொறிக்கப்பட்டவை தாம் ப்ராஹ்மி கல்வெட்டுகள். வெகு குறைவான எழுத்துகளே கொண்டவை. சிதைந்த நிலையில் உள்ளவை. எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் படித்து, படிஎடுக்கமுடியாத நிலையில் உள்ளவை. இவற்றை முதலில் 1924வாக்கில் கண்டறிந்து, இவை ப்ராஹ்மி வடிவில் உள்ளவை என்று சொன்னவர் கே.வி.சுப்பிரமணிய அய்யர். ஆனால் இவை தென்னிந்தியாவில் மற்ற இடங்களில் காணும் ப்ராஹ்மியிலிருந்து மாறுபட்டு, சில புதிய அம்சங்களைக் கொண்டதாகக் கண்டு, அந்த மாற்றங்கள், தமிழ் மொழி உச்சரிப்புக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்கள் எனவும் கண்டறிந்தார். ஆனால் இந்த இழையைப்பற்றி மேற்கொண்ட ஆராய்வை அவரோ, பின் யாருமோ தொடரவில்லை. அப்பயணமே மறக்கப்பட்டுவிட்டது.
போன வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இந்நூல் வெளியிட சென்னையில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஒரு சின்ன அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்திருந்தார்கள். அவ்வரங்கு சுமார் 100 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. இலக்கியக் கூட்டங்களுக்கே 100 பேர் கூடுவது துர்லபமாக இருக்கும்போது, கல்வெட்டு ஆராய்வு பற்றிய ஆங்கில நூலின் வெளியீட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கடந்த அனுவபவம் அவர்களுக்குச் சொன்னது. ஆனால் அன்று வந்த கூட்டத்தின் பெருக்கத்தைப் பார்த்து, நிகழ்ச்சி உடனே கீழ்த்தளத்தில் இருந்த பெரிய அரங்கிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இருக்கை தரும் பெரிய அரங்கு அது. அன்று நிற்போர் பெருக்கத்தையும் சேர்த்து அரங்கு நிறைந்து வழிந்தது. இது தமிழ்நாட்டின் அதிசயங்களில் ஒன்று.
இந்நூல் தமிழ் இலக்கியம், தமிழ்நாடு, அக்காலச் சமூகம், தமிழ் மொழியின் வளர்ச்சி, அது வளர்ந்த வரலாறு போன்ற பல சுவாரஸ்யம் நிறைந்த நாம் புதிதாகக் கேட்கும் செய்திகளைத் தருகிறது. இச்செய்திகள் தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியப் பரப்பு முழுதையும் உள்ளடக்கிய பின்னணியில் தமிழ் மொழியின் ஆரம்பங்களையும் சொல்கிறது.
தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள்
முன்னர் சொன்னது போல அசோகன் காலத்திலிருந்து ப்ராஹ்மி எழுத்துகள் ப்ராக்ருத மொழிக்கானவை என்பதை முதன் முதலில் 1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர் கண்டறிந்தார். ஆனால் தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்த காரணத்தால் அவற்றைப் படித்தறிவது சிரமமாகவே இருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள், அவற்றின் காலகட்ட வளர்ச்சிப்படிமங்களில், இன்றைய தமிழ் எழுத்துகளுடன் கொண்டுள்ள நெருங்கிய தோற்றத்தால் அவற்றைப் படியெடுத்துப் புரிந்து கொள்ளுதல் இவற்றிற்கு முந்தைய, மாறிய ப்ராஹ்மி எழுத்துகளைக் காட்டிலும் சுலபமாகவே இருந்தன. 1924-ல் தான் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இவை தமிழ் மொழியின் சப்தங்களை வெளிப்படுத்துதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட ப்ராஹ்மிதான் எனவும், ஆகவே, இவற்றை தமிழ்-ப்ராஹ்மி என வேண்டும் என்றும் கண்டுபிடித்தார். ஆனால், இதன் பிறகு, இதைத் தொடர்ந்து இவற்றை, இப்புதிய பார்வையில் ஆராயவில்லை.
இந்த ப்ராஹ்மி எழுத்துகளைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள், அசோகர் காலத்திற்குப் பின்வந்த ஜைனர்கள். அக்காலத்தில் மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், வளமான இலக்கிய மொழியாகவும் தமிழ் இருந்த காரணத்தால், ஜைனர்கள் தமிழ் மொழியைக் கற்றனர். அம்மொழிக்கு வரிவடிவம் கொடுக்க, தாம் அறிந்த ப்ராஹ்மி எழுத்துகளைப் பயன்படுத்தினர். தாம் கற்ற தமிழ் மொழியில் இலக்கண நூல்கள் பெரும்பாலானவற்றையும் காப்பியங்கள் பலவற்றையும் நீதி நூல்களையும் அவர்கள் இயற்றினர்.
பானை உடைசல்களில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் காணப்படும் ப்ராஹ்மி எழுத்துகளையும், அதனைத் தொடர்ந்து வட்டெழுத்துகள் பெற்ற மாற்றத்தையும் ஆராய்ந்த ஐராவதம் மஹாதேவன் இவை தமிழில் இருப்பதாலும், நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமங்களிலும் பரவியிருப்பதாலும், அக்கால கட்டத்திலேயே, தமிழ்நாட்டில் கல்விப்பெருக்கம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் பரவியிருந்தது என்ற முடிவிற்கு வருகிறார். இதற்கான இரண்டு சாட்சியங்கள், தென்னிந்தியாவின் வட பகுதிகளில் (கன்னடமும் தெலுங்கும் பேசப்படும் பகுதிகளில்) காணப்படும் கல்வெட்டுகள், ப்ராகிருத மொழிக்கான கல்வெட்டுகளே அல்லாது, கன்னட, தெலுங்கு மொழிகளுக்கான (தமிழ் போல்) மாற்றப்பட்ட ப்ராஹ்மி எழுத்துகள் கொண்டவை அல்ல. அப்பகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே– அது அரசு மொழியுமாக இருந்த காரணத்தால், தம் செயல்பாடுகளுக்குப் போதுமானதாக இருக்கக் கண்டனர்– தாம் கற்ற தமிழ் மொழிக்கு, தாம் கொணர்ந்த ப்ராஹ்மி எழுத்துகளை, தமிழ் ஓசைக்கு ஏற்ப மாற்றி புதிய வரிவடிவங்களை உருவாக்கினர். ஆனால் தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் ப்ராகிருத மொழியின் மேலாண்மையை அனுமதிக்கவில்லை. அதுவே மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் இருந்ததால், ஜைனர்கள் தமிழ் கற்றனர்; தம் மதத்தைப் பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்துவப் பாதிரிமார்கள் தமிழ் கற்று, தமிழில் அகராதிகளும், காப்பியங்களும் இயற்றியது போல; தம் பிரச்சாரங்களைத் தமிழிலேயே செய்தது போல.
தமிழ் சமூகத்தின் எல்லாத் தரப்பினரிடையேயும் கல்வி பரவியிருந்ததற்கு, அக்காலகட்ட சங்ககாலப் புலவர்களில், மன்னர்கள், வாணிகர், பிராமணர், பல்வேறுவகை தொழில் வினைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் எல்லாத்தரப்பினரும் இருந்ததே ஒரு பனமான சாட்சியமாகும். தமிழ்நாட்டில் அரசும் நிர்வாகமும், கிராமங்களின் சுய நிர்வாக அமைப்புகளிருந்து படிபடியாக அரசன் வரை கட்டமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்களில், அம்பலம், மன்றம் பொதியல் என அவ்வமைப்புகள் பேசப்படுகின்றன. தமிழ்நாடு அக்காலங்களில் பல சிற்றரசுகளாக இருந்தபோதிலும் அவை சுதந்திர அரசுகளாக இருந்தன. மௌரிய சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன.
முடிவில், சுருக்கமாக, தமிழ்நாட்டில் எங்கும் ப்ராகிருத மொழி பேசும் கல்வெட்டுகள் அக்காலகட்டத்தில் காணப்படவில்லை. மாறாக கன்னடம், தெலுங்கு மொழி பேசும் பிராந்தியங்களில் காணும் கல்வெட்டுகள் ப்ராகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. தமிழ்நாடு வந்த ஜைனர்கள் தமிழ் கற்க வேண்டிய கட்டாயம் எற்பட்டது போல அல்லாது, தென்னிந்தியாவின் வடபகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே செயல்பட முடிந்துள்ளது. கன்னட மொழியில் முதல் இலக்கிய வெளிப்பாடு 9-ஆம் நுற்றாண்டு கவிராஜ மார்க்கமாகவும், தெலுங்கில் 11-ஆம் நுற்றாண்டு நன்னய்யனின் மகாபாரதமாகவும் இருந்தன. தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்.
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன்.