கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
Saturday, August 20, 2011
Saturday, July 23, 2011
ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்
ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்
=+=
[2]ஈழத்தமிழ் இலக்கியம் பற்றி தமிழகத்தமிழர்கள் அக்கறை கொள்வதில்லை, அங்கீகரிப்பதில்லை, பொருட்படுத்துவதுமில்லை என்ற குறை எப்போதும் ஈழத்தமிழர்களிடம் உண்டு. ஒரு சில விதிவிலக்குகள் உண்டுதான். கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் கல்வித்துறையில் ஒரு காலும் முற்போக்கு எழுத்தில் ஒரு காலும் பதித்த காரணத்தாலும் இவ்விரு நிறுவனங்களின் அறிமுகமே போதுமானதாலும், உடன் அங்கீகாரம் பெற்றனர். மற்றபடி படித்தறிந்து, தேர்ந்து யாரையும் அங்கீகரிக்கும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் உள்ளவர்களில் சிறப்பான பங்களிப்பு தந்துள்ளவர்களுக்கே தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத போது ஈழத்துத்தமிழ் எழுத்துலகம் தங்களைக் கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏதும் நியாயமோ, அர்த்தமோ கொண்டதாகத் தெரியவில்லை. இதை நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்திருக்கிறேன்.ஆனால் ஈழத்தமிழர் எங்கிருந்தாலும் தமிழக இலக்கிய பிரவாஹத்தை தொடர்ந்தே வந்திருக்கிறார்கள். அது அவர்களது இயல்பு என்பதும் தமிழகத்தில் எழும் சீரிய முயற்சிகளுக்கு தமிழகத்தார்களைவிட ஈழத்தமிழர்களே அதிக ஆர்வம் காட்டி, ஆதரவும் தந்துள்ளார்கள் என்பதும் எனக்கு எழுத்துப் பத்திரிகை காலத்திலிருந்து தெரிந்த விஷயம். அது வரலாறு. இப்போது இன்னொரு சான்றைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.
[3]இலங்கையில் கொழும்புவிலிருந்து இவ்வருடம் தொடங்கப்பட்டிருக்கும் பேராசிரியர் செல்வநாயகம் அறக்கட்டளை தன் முதல் விருதுக்கு, ஐராவதம் மகாதேவனின், “ஆரம்ப காலக் கல்வெட்டுகள்: தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை” (Early Tamil Epigraphy: From the earliest Times to the 6th century A.D) என்னும் கல்வெட்டு ஆராய்ச்சி நூலுக்கு, அவரது ஆயுட்கால சாதனையாக, 2003-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நூலை அறக்கட்டளையின் நிர்வாகக்குழு ஏகமனதாகத் தேர்ந்து எடுத்துள்ளது. முதல் விருதே எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, தமிழ் மொழியின், தமிழ் வரலாற்றின் ஆரம்ப காலம் பற்றிய புதிய பார்வைகளை உருவாக்கித் தந்துள்ள, ஒரு மைல்கல் என கருதப்படத்தக்க ஓர் ஆராய்ச்சி நூலுக்கு தரப்பட்டுள்ளதன்மூலம், இவ்வீழத்து அறக்கட்டளையின் நிர்வாகிகளின் உயர்ந்த லட்சியங்களும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அச்சமூகத்தின் கௌரவத்தை உயர்த்தியுள்ளன. இவ்வாராய்ச்சி நூல் ஐராவதம் மகாதேவனின் தன் நீண்ட கால உழைப்பின், தேடல் தாகத்தின் விளைவு. [4]குறிப்பாக, அவர் இந்திய நிர்வாகத் துறையிலிருந்து ஓய்வு பெற்றபின் கடந்த 14 வருட காலக் கடுமையான உழைப்பில் பெற்றது. அறக்கட்டளையின் முதல் அடிவைப்பே அதற்குச் சிறப்புதரும் ஒன்றாக அமைந்ததற்கு சிவத்தம்பியின் தலைமையில் இயங்கும் நிர்வாகக் குழுவைப் பாராட்டவேண்டும்.தமிழ்நாடு அரசோ, பண்டித உலகமோ, இலக்கிய உலகமோ, இந்த கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் அவருக்குத் தரவில்லை. இந்த நூலை வெளியிட்டுள்ள நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ஒரு தனி மனித ஆர்வமும் (எஸ்.ராமகிருஷ்ணன், கிரியா, சென்னை) Harvard University, Cambridge, Massachusetts-ம் தான். இதைப் புரிந்துகொள்ள ஒரு பழம் செய்தியை நினைவுப்படுத்திக்கொள்ளலாம். 1967-லோ என்னவோ, உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி, மகாதேவன் அவமானப்படுத்தப்பட்டார். இதற்குத் தலைமை தாங்கியவர், திராவிட அரசியல் சார்பு கொண்டவரும் தமிழ் பண்டிதருமான இலக்குவனார் என்பவர். பொதுவாகவே தமிழ் பண்டித உலகமே திராவிட அரசியல் வகுக்கும் அறிவார்த்த நிலைப்பாட்டை கேள்வியின்றி மேற்கொண்ட உலகம்தான். அதை கோஷமாகவே முன்வைக்கும் உலகம்தான். அதனால் இலக்குவனாரை மாத்திரம் இதற்கு இலக்காக்குவது தவறு.
[5]ஐராவதம் இந்திய அரசின் நிர்வாகத்துறை அதிகாரி. அரசியல் சார்புகள் அவர் துறைக்கு அப்பாற்பட்டன. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்குத் தடையில்லை; அதிலும் சிவராம மூர்த்தி போன்ற கலைத்துறை, வரலாற்று அறிஞர் ஆதரவில் செயல்படுபவர்க்கு. அமைதியாக தன் தேடலில் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐராவதம் மகாதேவனால் முழுநேரமும் ஓர் ஆர்வலர் குழுவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தீவிரமாக தன் ஆராய்வில் ஈடுபட முடிந்துள்ளது.அவரது ஆராய்ச்சி, இதுகாறும் அதிகம் கவனம் பெறாத ஆரம்பகாலக் கல்வெட்டுகளை மாத்திரமே களனாகக் கொண்டது. மிக நீண்ட கால நாகரிகமும், சரித்திரமும், இலக்கியப் பதிவுகளும் கொண்ட நாடுகளில் தமிழ்நாடும் நாகரிகமும் ஓன்று. தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும், கல்லும் ஒரு நீண்ட வரலாற்றைக்கூறும். அவ்வரலாறு அதன் கட்டிடங்களிலும், கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. இலக்கியத்துக்கு முந்திய பதிவுகள் கல்வெட்டுகளில். கல்வெட்டுகள் இவ்வளவு பரவலாகவும், அதிக எண்ணிக்கையிலும் தென்னிந்தியாவில் பரவியிருப்பதுபோல் வேறு எங்கும் காணக்கிடைக்காது. அதிலும் தமிழ்நாட்டில் காணப்படுபவை கி.மு.மூன்றாம் நுற்றாண்டிலிருந்து தொடங்கும் வரலாறு கொண்டவை.
ஐராவதம் மகாதேவன் தன் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளவை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நுற்றாண்டு வரையான காலகட்டத்தில், மௌரிய சாம்ராஜ்யத்தின் காலத்தில், தெற்கு நோக்கிப் பயணத்தை தொடங்கிய ஜைனர்கள், பௌத்தர்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த பிராஹ்மி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள். இன்றைய தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தின் ஆரம்பங்கள் நாம் தெரிந்துள்ள கோவில் கல்வெட்டுகளோ, செப்புத்தகடுகளோ அல்ல. இவை பிந்திய வடிவங்கள்; சாசனங்கள். ஜைனர்கள் வாழ்ந்த மலைக்குகைகளில் சாசனங்களாகப் பொறிக்கப்பட்டவை தாம் ப்ராஹ்மி கல்வெட்டுகள். வெகு குறைவான எழுத்துகளே கொண்டவை. சிதைந்த நிலையில் உள்ளவை. எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் படித்து, படிஎடுக்கமுடியாத நிலையில் உள்ளவை. இவற்றை முதலில் 1924வாக்கில் கண்டறிந்து, இவை ப்ராஹ்மி வடிவில் உள்ளவை என்று சொன்னவர் கே.வி.சுப்பிரமணிய அய்யர். ஆனால் இவை தென்னிந்தியாவில் மற்ற இடங்களில் காணும் ப்ராஹ்மியிலிருந்து மாறுபட்டு, சில புதிய அம்சங்களைக் கொண்டதாகக் கண்டு, அந்த மாற்றங்கள், தமிழ் மொழி உச்சரிப்புக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்கள் எனவும் கண்டறிந்தார். ஆனால் இந்த இழையைப்பற்றி மேற்கொண்ட ஆராய்வை அவரோ, பின் யாருமோ தொடரவில்லை. அப்பயணமே மறக்கப்பட்டுவிட்டது.
[6]இப்போது மகாதேவன் அந்த 120 கல்வெட்டுகளும் இருக்கும் இடங்களுக்குச்சென்று, புகைப்படமாக, கைஎழுத்தாக, இன்னும் பல நவீன சாதனங்ளில் படியெடுத்துப் பிரசுரித்துள்ளார். அவற்றை வாசிக்கும் முறை, அக்காலத்தில் வழங்கிவந்த 18 மெய்யெழுத்துக்களும் 8 உயிர் எழுத்துகளுமே கொண்ட மொழியின் ஒரளவு கட்டமைக்கப்பட்ட நெடுங்கணக்கு போன்றவற்றையெல்லாம், தொல்காப்பியம், மற்றும் பல் நிகண்டுகளின் உதவியோடு கொடுக்கப்பட்டுள்ள விரிவான விளக்கங்கள், இக்கல்வெட்டுகள் ஒவ்வொன்றினதுமான கால நிர்ணயம், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள், கிராமங்கள், ஊர்களின் பெயர்கள், சொல்லாக்க வரலாற்று விளக்கம், சொற்களின் இலக்கணக்கூறுகள், இப்படியாக எல்லாவற்றின் விளக்கத்தொகுப்பு என எல்லாம் அடங்கிய களஞ்சியம் இது. மேற்கொண்டு ஆராய்வைத் தொடங்குகிறவர்கள் ஐராவதம் சென்றவிடங்களுக்கெல்லாம் போய் கல்வெட்டுகளை மீண்டும் தேட வேண்டாது, ஒரு நீண்ட காலகட்டம் வரை, அவரே உடன் அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், தான் கடந்துவந்த பாதையின் வரைபடத்தையும் தந்துள்ளார்.போன வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இந்நூல் வெளியிட சென்னையில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஒரு சின்ன அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்திருந்தார்கள். அவ்வரங்கு சுமார் 100 பேர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. இலக்கியக் கூட்டங்களுக்கே 100 பேர் கூடுவது துர்லபமாக இருக்கும்போது, கல்வெட்டு ஆராய்வு பற்றிய ஆங்கில நூலின் வெளியீட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கடந்த அனுவபவம் அவர்களுக்குச் சொன்னது. ஆனால் அன்று வந்த கூட்டத்தின் பெருக்கத்தைப் பார்த்து, நிகழ்ச்சி உடனே கீழ்த்தளத்தில் இருந்த பெரிய அரங்கிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இருக்கை தரும் பெரிய அரங்கு அது. அன்று நிற்போர் பெருக்கத்தையும் சேர்த்து அரங்கு நிறைந்து வழிந்தது. இது தமிழ்நாட்டின் அதிசயங்களில் ஒன்று.
இந்நூல் தமிழ் இலக்கியம், தமிழ்நாடு, அக்காலச் சமூகம், தமிழ் மொழியின் வளர்ச்சி, அது வளர்ந்த வரலாறு போன்ற பல சுவாரஸ்யம் நிறைந்த நாம் புதிதாகக் கேட்கும் செய்திகளைத் தருகிறது. இச்செய்திகள் தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியப் பரப்பு முழுதையும் உள்ளடக்கிய பின்னணியில் தமிழ் மொழியின் ஆரம்பங்களையும் சொல்கிறது.
தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள்
முன்னர் சொன்னது போல அசோகன் காலத்திலிருந்து ப்ராஹ்மி எழுத்துகள் ப்ராக்ருத மொழிக்கானவை என்பதை முதன் முதலில் 1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர் கண்டறிந்தார். ஆனால் தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்த காரணத்தால் அவற்றைப் படித்தறிவது சிரமமாகவே இருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள், அவற்றின் காலகட்ட வளர்ச்சிப்படிமங்களில், இன்றைய தமிழ் எழுத்துகளுடன் கொண்டுள்ள நெருங்கிய தோற்றத்தால் அவற்றைப் படியெடுத்துப் புரிந்து கொள்ளுதல் இவற்றிற்கு முந்தைய, மாறிய ப்ராஹ்மி எழுத்துகளைக் காட்டிலும் சுலபமாகவே இருந்தன. 1924-ல் தான் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இவை தமிழ் மொழியின் சப்தங்களை வெளிப்படுத்துதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்ட ப்ராஹ்மிதான் எனவும், ஆகவே, இவற்றை தமிழ்-ப்ராஹ்மி என வேண்டும் என்றும் கண்டுபிடித்தார். ஆனால், இதன் பிறகு, இதைத் தொடர்ந்து இவற்றை, இப்புதிய பார்வையில் ஆராயவில்லை.
[7]ஐராவதம் மஹாதேவனின் பல்துறை ஆராய்வில் எழுத்துக்கூட்டு முறை (orthography), தொல் எழுத்துக்கலை (palaeography), தமிழ் இலக்கணம், ஆரம்ப சங்க இலக்கியங்களில் காணும் ஒத்திசைவின் சாட்சியங்கள் என இவற்றைப் படிக்க முடிந்துள்ளது. இக்கல்வெட்டுகள் ஒன்றிரண்டு வரிகள் அல்லது வாக்கியங்களே கொண்ட மிகச் சிறிய சாசனங்களால் ஆனவை. பெரும்பாலும் மனித நடமாட்டமற்ற மலைக்குகைகளில், பாறைப்பிளவுகளில் காணப்படுபவை. இக்குகைகள் ஜைன புத்த (பெரும்பாலும் ஜைன) பிக்குகளுக்கான தங்குமிடமாக அமைந்தவை. கற்படுக்கைகள் கொண்டவை. இத்தகைய கல்வெட்டுகள் மொத்தம் 89. பின்னர் இன்னும் 21 கல்வெட்டுகள் தமிழ்-ப்ராஹ்மிக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சியின் ஆரம்பமான வட்டெழுத்துக்களால் ஆனவை. இவற்றிலுருந்து தான் இன்றைய தமிழ் எழுத்துகள் பரிணாமம் பெற இருந்தன.
[8]இக்கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள், அக்காலத்தில் கிழக்குக் கடற்கரையையும் (தமிழ்நாட்டையும்) மேற்குக் கடற்கரையையும் (சேர நாட்டையும்) இணைக்கும் வாணிக நெடுஞ்சாலையைப் புள்ளியிட்டு வரைந்து காட்டுவதாகவே உள்ளன. அக்கால ரோமானிய நாணயங்கள், ப்ராஹ்மி எழுத்துகள் கீறப்பட்ட பானை உடைசல்கள் (shreds) எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ள இடங்கள், கல்வெட்டுகள் புள்ளியிட்டுக் கோடிழுக்கும் பாதையோடு ஒத்துள்ளன. பானை உடைசல்களில் காணப்படும் ப்ராஹ்மி கீறல்கள் கிராமப்புறங்களிலும் கல்வி பரவியிருந்ததையும், மொழி வாய் மொழி மரபிலிருந்து, வரிவடிவ மரபிற்கு மாற்றமடைந்துள்ளதையும் குறிக்கும்.இந்த ப்ராஹ்மி எழுத்துகளைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள், அசோகர் காலத்திற்குப் பின்வந்த ஜைனர்கள். அக்காலத்தில் மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், வளமான இலக்கிய மொழியாகவும் தமிழ் இருந்த காரணத்தால், ஜைனர்கள் தமிழ் மொழியைக் கற்றனர். அம்மொழிக்கு வரிவடிவம் கொடுக்க, தாம் அறிந்த ப்ராஹ்மி எழுத்துகளைப் பயன்படுத்தினர். தாம் கற்ற தமிழ் மொழியில் இலக்கண நூல்கள் பெரும்பாலானவற்றையும் காப்பியங்கள் பலவற்றையும் நீதி நூல்களையும் அவர்கள் இயற்றினர்.
பானை உடைசல்களில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் காணப்படும் ப்ராஹ்மி எழுத்துகளையும், அதனைத் தொடர்ந்து வட்டெழுத்துகள் பெற்ற மாற்றத்தையும் ஆராய்ந்த ஐராவதம் மஹாதேவன் இவை தமிழில் இருப்பதாலும், நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமங்களிலும் பரவியிருப்பதாலும், அக்கால கட்டத்திலேயே, தமிழ்நாட்டில் கல்விப்பெருக்கம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் பரவியிருந்தது என்ற முடிவிற்கு வருகிறார். இதற்கான இரண்டு சாட்சியங்கள், தென்னிந்தியாவின் வட பகுதிகளில் (கன்னடமும் தெலுங்கும் பேசப்படும் பகுதிகளில்) காணப்படும் கல்வெட்டுகள், ப்ராகிருத மொழிக்கான கல்வெட்டுகளே அல்லாது, கன்னட, தெலுங்கு மொழிகளுக்கான (தமிழ் போல்) மாற்றப்பட்ட ப்ராஹ்மி எழுத்துகள் கொண்டவை அல்ல. அப்பகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே– அது அரசு மொழியுமாக இருந்த காரணத்தால், தம் செயல்பாடுகளுக்குப் போதுமானதாக இருக்கக் கண்டனர்– தாம் கற்ற தமிழ் மொழிக்கு, தாம் கொணர்ந்த ப்ராஹ்மி எழுத்துகளை, தமிழ் ஓசைக்கு ஏற்ப மாற்றி புதிய வரிவடிவங்களை உருவாக்கினர். ஆனால் தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் ப்ராகிருத மொழியின் மேலாண்மையை அனுமதிக்கவில்லை. அதுவே மக்கள் மொழியாகவும், அரசு மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் இருந்ததால், ஜைனர்கள் தமிழ் கற்றனர்; தம் மதத்தைப் பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்துவப் பாதிரிமார்கள் தமிழ் கற்று, தமிழில் அகராதிகளும், காப்பியங்களும் இயற்றியது போல; தம் பிரச்சாரங்களைத் தமிழிலேயே செய்தது போல.
தமிழ் சமூகத்தின் எல்லாத் தரப்பினரிடையேயும் கல்வி பரவியிருந்ததற்கு, அக்காலகட்ட சங்ககாலப் புலவர்களில், மன்னர்கள், வாணிகர், பிராமணர், பல்வேறுவகை தொழில் வினைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் எல்லாத்தரப்பினரும் இருந்ததே ஒரு பனமான சாட்சியமாகும். தமிழ்நாட்டில் அரசும் நிர்வாகமும், கிராமங்களின் சுய நிர்வாக அமைப்புகளிருந்து படிபடியாக அரசன் வரை கட்டமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்களில், அம்பலம், மன்றம் பொதியல் என அவ்வமைப்புகள் பேசப்படுகின்றன. தமிழ்நாடு அக்காலங்களில் பல சிற்றரசுகளாக இருந்தபோதிலும் அவை சுதந்திர அரசுகளாக இருந்தன. மௌரிய சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன.
[9]தமிழ் ப்ராஹ்மி 18 மெய்யெழுத்துகளையும், 8 உயிர் எழுத்துகளையும் மட்டுமே கொண்டதாக இருந்தது. பனை ஓலையும், எழுத்தாணியும், எழுத்தறிவு பரவ, ஜன நாயகப்படுத்தப்பட, எளிதான, மலிவான, தமிழ்நாட்டில் குறையின்றி எங்கும் இறைந்து கிடக்கும் சாதனங்களாயின. இப்பனையோலையின் அறிமுகமே எழுதுவற்கு எளிதான வட்டெழுத்துகள் ஒரு சில நூற்றாண்டுகளிலேயே– ஆறு-ஏழாம் நூற்றாண்டுகளில்– வருகைதருவதற்கும் காரணமாயிருந்திருக்கக்கூடும். இக்கட்டத்தின் ஆரம்பத்தில், தமிழ் எழுத்துகள் ஒரு நிலைபெற்ற வளர்ச்சிக்கட்டத்தை அடைந்துவிட்டன.
[10]தமிழ்நாட்டின் வாணிகப் பெருக்கம் சங்ககாலக்கட்டத்தில், வட மேற்கே ரோமானியப் பேரரசையும், தெற்கே இலங்கையையும், கிழக்கே மலேயா, தாய்லாந்து எனவும் தன் எல்லைகளை நீட்டித்திருந்தது. எகிப்தில் சமீபத்தில் நடந்த புதைபொருள் ஆராய்வில், தமிழ் ப்ராஹ்மி எழுத்துகள் கீறப்பட்டிருந்த பானை உடைசல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டு ஆவணம் ஒன்று வியன்னா அரும்பொருள் காப்பகத்தில் உள்ளது. அது முசிரியிலிருந்து அலெக்ஸாண்ட்ரியாவுக்கு பொருள் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் என ஆராய்ந்து அறியப்பட்டுள்ளது.முடிவில், சுருக்கமாக, தமிழ்நாட்டில் எங்கும் ப்ராகிருத மொழி பேசும் கல்வெட்டுகள் அக்காலகட்டத்தில் காணப்படவில்லை. மாறாக கன்னடம், தெலுங்கு மொழி பேசும் பிராந்தியங்களில் காணும் கல்வெட்டுகள் ப்ராகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. தமிழ்நாடு வந்த ஜைனர்கள் தமிழ் கற்க வேண்டிய கட்டாயம் எற்பட்டது போல அல்லாது, தென்னிந்தியாவின் வடபகுதிகளில் ஜைனர்கள் ப்ராகிருத மொழியிலேயே செயல்பட முடிந்துள்ளது. கன்னட மொழியில் முதல் இலக்கிய வெளிப்பாடு 9-ஆம் நுற்றாண்டு கவிராஜ மார்க்கமாகவும், தெலுங்கில் 11-ஆம் நுற்றாண்டு நன்னய்யனின் மகாபாரதமாகவும் இருந்தன. தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்.
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன்.
Tuesday, April 12, 2011
சாயிபாபா
http://www.vinavu.com/2011/04/07/sai-baba/
”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”
இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய சாயிபாபாதான்.
வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…
ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.
1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்., வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.
1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு நகரமாக வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.
அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.
சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.
”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன். நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”
1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.
அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும்.
அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல் மருத்துவமனையைக் கட்ட 108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.
அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.
“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால் எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”
இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.
ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள். ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின் கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.
பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும் எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.
வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.
ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது இந்த சாமியார்களின் மடத்துக்கு வருகிறார்கள்.
இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த வகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.
தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா. நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.
இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள், ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.
முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!
அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!
இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள் அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.
பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?
மக்களின் போராட்டங்களை அடக்க ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?
முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.
சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்
ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.
Tuesday, December 7, 2010
ஆரிய ராமனும் வைதீகச் சோழனும்
http://www.kalachuvadu.com/issue-131/page23.asp
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை அதற்கு முழுமையான உரிமை கோரிய இரு இந்து அமைப்புகளுக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கும் மூன்று பகுதிகளாகப் பங்கிட்டு வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். பல பத்தாண்டுக் காலமாக நாட்டின் இறையாண்மைக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் சிக்கல் தொடர்பான வழக்கு என்பதால் பலதரப்பினரும் பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். செப்டம்பர் 30ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புமீது கருத்துத் தெரிவித்த பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தம் ஓட்டுவங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு என்னும் குற்றச்சாட்டு எழுந்துவிடாதபடியும் மிக எச்சரிக்கையாக வாக்கியங்களைக் கையாண்டனர். தீர்ப்புமீது அதிருப்திகொண்டிருக்கும் தரப்பினரது உணர்வுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்ட ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் தீர்ப்பில் மேல்முறையீட்டுக்கு வழிவகுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்றன. அதிருப்தியாளர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு இத்தீர்ப்பு வாய்ப்பளித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் கவலையளிக்கும் வேறுபல கூறுகள் இத்தீர்ப்பினுள் புதைந்துள்ளன. வால்மீகியின் புகழ் பெற்ற இதிகாச நாயகனான ராமன் பிறந்தது அயோத்தியின் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் என்னும் இந்து அமைப்புகளின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்துக்கு எவ்வகையான தொல்லியல், வரலாற்றுச் சான்றுகளும் தேவைப்படவில்லை. வருங்காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாகவும் அரசியல் போக்கை மறைமுகமாகவும் பாதிக்கக்கூடியது இது. நீதிமன்றத் தீர்ப்புகள் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டவட்டமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்னும் பொதுவான நம்பிக்கையையும் இத்தீர்ப்பு தகர்த்திருக்கிறது.
‘ஜனநாயகவாதி’களும் மதச்சார்பின்மை குறித்துத் தொடர்ந்து பேசிவரும் அரசியல்வாதிகளும் வாயை இறுகப்பொத்திக்கொண்டிருக்கையில் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அறிவுலகவாதிகளுமே இத்தீர்ப்புக்கு எதிர்வினையாற்றியிருக்கின்றனர். குழப்பமான, முன் தீர்மானங்கள்கொண்ட இந்த எதிர்வினைகள் தீர்ப்பின் அநீதி குறித்த விவாதங்களை எழுப்புவதைவிட அதை அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டவை.
ஆனால் தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்து நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகளுக்குத் தமிழக அரசியல் தளத்திலிருந்து எழுந்துள்ள எதிர்வினையொன்று குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வெளியான அன்று தான் வெளியிட்ட அறிக்கையொன்றில் ‘இருதரப்பி’னரும் திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு எனவும் திருப்தியடையாதவர்கள் மேல்முறையீடு செய்யத் தீர்ப்பு வழிவகுத்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் சொல்லியிருந்த முதல்வர் கருணாநிதி அதோடு அயோத்திப் பிரச்சினையைக் கை கழுவிவிட விரும்பாததாலோ என்னவோ இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு அக்டோபர் நான்காம் தேதி வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில் “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜனின் கல்லறையையோ நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறிய முடியவில்லையே” என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். அயோத்தி குறித்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் தெரிவித்த கருத்துகளை நேரடியாக விமர்சனத்துக்குட்படுத்த விரும்பாத கருணாநிதி மேற்கண்ட அறிக்கையில் அதைப் பூடகமாகச் செய்ய முயன்றிருக்கிறார். ஒரு வகையில் கருணாநிதியின் இந்தத் ‘தார்மீகக் கோபம்’ மதச்சார்பற்ற அவரது ஆதரவு அறிவுஜீவிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அவர் மீதான பிற அரசியல் விமர்சனங்களைப் புறந்தள்ளி இன்னும் சிலகாலம் அவரைக் கொண்டாடுவதற்கு அவருடைய ஆதரவாளர்களுக்கு இது உதவக்கூடும்.
தீர்க்கமான சமூகவியல் பார்வையோ நவீன அரசியலின் பன்முகக்கூறுகளை எதிர்கொள்வதற்கான கோட்பாட்டு வலிமையோ அற்ற, அரசியல்நீக்கம் செய்யப்பட்ட திமுக தொண்டர்களிடம் திராவிட இயக்கத்தின் எஞ்சியிருக்கும் ஒரே முன்னோடி என்னும் பாவனையோடு இத்தகு உள்ளீடற்ற கருத்துகளைப் பரப்பி வருவது கருணாநிதிக்கு வாடிக்கை. அவருடைய நோக்கம் அதைத் தாண்டியும் விரிகிறது. ராமனின் பிறப்பு குறித்துப் பேச முற்பட்ட கருணாநிதி ராமனை ஆரிய நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆரிய நாகரிகம் அறிவியல் ஆதாரங்களற்ற பகுத்தறிவுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுப்பதிலேயே முனைப்பாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பெரியாரியத்திலிருந்து ‘வடவர்-ஆரியர்’ என்னும் அம்சத்தை மட்டுமே பிரித்தெடுத்து அதைத் தன் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திவரும் கருணாநிதியிடமிருந்து இது போன்ற அறிக்கை வெளிவருவது வியப்பூட்டக்கூடியதல்ல. அவரது குடும்பத் தொலைக் காட்சிகளில் மூடநம்பிக்கைகளைப் பரப்பிவரும் ராமாயணம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பப்படுவதைக் கண்டுகொள்ளாத கருணாநிதி தன் அறிக்கையில் ராமன் என்னும் ஆரிய அடையாளத்திற்கு எதிராக ராஜராஜன் என்னும் திராவிடத் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்த முயல்கிறார். அரசியல்ரீதியாக நெருக்கடியைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு தருணத்திலும் திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் புறந்தள்ள முயல்கிறது என அறிக்கை வெளியிடுவதன் மூலமும் தன் சொந்த நெருக்கடிகளைத் தமிழ் இனத்தின் நெருக்கடியாகச் சித்தரிப்பதன் மூலமும் தன் விமர்சகர்களைத் தந்திரமாக மவுனமாக்கிவரும் கருணாநிதி அலகாபாத் நீதிமன்றம் ராமனின் பிறப்பை உறுதிசெய்துள்ளதையும் தமிழ் அடையாளமாகத் தான் போற்றிப் புகழும் ராஜராஜனின் கல்லறை கண்டு பிடிக்கப்படாததையும் (இது யாருடைய குற்றமோ?) எதிரெதிராக நிறுத்தி முன்னெடுக்க விரும்பும் நிகழ்கால அரசியல் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று.
அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசும்போது ‘லெமூரியா’ என்னும் தமிழர்களின் கடல்கொண்ட கண்டம் குறித்து ஆற்றிய உரையையும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுப் பெருவிழாவில் ராஜராஜன் நிறுவிய தமிழர்களின் கலை, பண்பாட்டுப் பெருமிதங்கள் குறித்துச் சொன்ன கருத்துகளையும் நினைவூட்டித் திராவிட நாகரிகத்தை ‘மீட்பவராக’த் தன்னை இந்த அறிக்கையின் வாயிலாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் கருணாநிதி.
திராவிட இயக்கத்தினரால் அடையாளப்படுத்தப்படும் ஆரியம் என்பது நால்வர்ணக் கோட்பாடு, பிராமணிய மேலாண்மை, மூட நம்பிக்கை சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் தொகுப்பு. இதன் எதிர் நிலையாக அடையாளப்படுத்தப்படுவதே சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை ஆகிய கூறுகளால் கட்டமைக்கப்பட்ட திராவிடப் பண்பாடு. பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்னும் எதிர்வைக் கட்டமைப்பதே இத்தகு அடையாளப்படுத்தல்களின் உள்ளடக்கம். எல்லாவகையான சமூக நெருக்கடிகளும் அந்நெருக்கடிகளுக்குக் காரணமான முரண்களும் ஆரியத்தின் விளைவுகள், மற்றவை கற்பனையானவை, அல்லது முக்கியத்துவமற்றவை. எனவே அவற்றுக்கான தீர்வுகளும் ஆரிய எதிர்ப்பை மையப்படுத்தியவை. இத்தகு அடையாளங்களையே திராவிடக் கட்சிகளும் அவற்றின் ஆதரவு அறிவுஜீவிகளும் மீண்டும் மீண்டும் கட்டமைத்து வருகின்றனர்.
ஆனால் சமூக முரண்பாடுகளை அடையாளம் காண்பதற்கு இவ்வெதிர்வு மட்டுமே போதுமானது அல்ல. மேலும் இத்தகு எதிர்வுக்கு இணையான வேறுபல எதிர்வுகளின் இருப்பை மறைப்பதற்காகவே இவ்வடையாளம் திராவிட இயக்கங்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பிராமணர் அல்லாதார் என்னும் அடையாளம் பிராமணியத்தை மறுத்ததாகவும் சாதியத்தை விலக்கியதாகவும் இருந்திருக்கவில்லை என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ராமன் என்னும் ஆரிய அடையாளத்துக்கு எதிராகத் திராவிடத் தமிழ் அடையாளமாகக் கட்டமைக்கப்படும் ராஜராஜனைப் பற்றிய பரிசீலனைகள் இதை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
ராஜராஜன் ஆரியத்தின் தமிழ்முகமாகவும் வைதீகத்தை அரசியல் மயமாக்கி அதன் ஆதிக்கத்தைப் பரப்பியவனாகவும் வரலாற்றாய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை மறைப்பதற்கான அரசியல் தந்திரம் இது. ராமன் என்னும் இந்துப் பேரடையாளத்தில் இந்தியாவின் பன்முக அடையாளங்கள் மறுக்கப்பட்டு சாதி உள்ளிட்ட பாகுபாடுகள் மறைக்கப்பட்டுவிடுவதைப் போலவே, ராஜராஜன் என்னும் தமிழ்ப் பேரடையாளத்தால் வைதீகமும் சாதியப் பாகுபாடும் பரவியது என்னும் வரலாற்று உண்மையும் மறைக்கப்பட்டுவிடுகிறது.
கடந்த சில பத்தாண்டுகளில் அரசியல் தளத்திலும் வரலாறு, தொல்லியல், போன்ற துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ள சான்றாதாரங்களும் தவிரக் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட கால அளவில் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய, தலித்திய, விளிம்புநிலைக் கருத்தியல்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் தமிழ் அடையாளம், தமிழக வரலாறு குறித்த புதிய கண்ணோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பிற்காலச் சோழர்காலம் பற்றிய புனைவுகள் வெளிறத் தொடங்கியிருக்கின்றன இத்தகு குறுக்கீடுகளின் முக்கியமான விளைவு தமிழ்ச் சமூகத்தின் நெருக்கடிகளுக்கான வேர்கள் இந்தப் பெருமிதங்களுக்குள் புதைந்திருப்பதைக் கண்டறிந்ததுதான்.
பிற்காலச் சோழர் காலம் தமிழக வரலாற்றின் முக்கியத்துவமுடைய காலகட்டம் எனக் கருதப்பட்டது. சோழர் காலம் பற்றிய தொடக்கக் கால நூல்கள் சமய, சாதி அபிமானம் கொண்டவர்களால் எழுதப்பட்டவை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசின் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டிருந்த சிலரால் சோழர் காலக் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற, இறுக்கமான சாதியமைப்பு இல்லாதவை என்னும் புனைவு கட்டமைக்கப்பட்டது. 1903இல் பிராமணஆதிக்கம் மேலோங்கியிருந்த உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பட்ட குடவோலை முறைபற்றிய குறிப்புகளை ஆதாரங் காட்டிச் சோழர் காலத்தில் சனநாயகம் தழைத்திருந்ததாக ஒரு புனைவு கட்டமைக்கப்பட்டது. தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருந்த, தேசிய உணர்வுகொண்ட வரலாற்று ஆசிரியர்கள் சிலருக்குச் சோழர் காலம் குறித்த பொற்காலப் பெருமிதத்தைக் கட்டி எழுப்ப இந்தப் புனைவு உறுதுணையாயிருந்தது.
1960களின் இறுதியில் திராவிட இயக்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த தொடக்கக் காலங்களிலேயே சோழர் காலம் பற்றிய விரிவான ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. பர்ட்டன் ஸ்டெயின் எழுதிய Peasant state and society in South India என்னும் புத்தகம் தவிர நபோரு கராஷிமா, ஒய். சுப்பராயலு, சுரேஷ் பி. பிள்ளை ஆகியோரது சோழர் காலம் குறித்த கருத்துகளும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. ஒய். சுப்பராயலுவின் Studies in Chola History, The Political Geography of the Chola Country ஆகிய இரண்டு நூல்களுங்கூடச் சோழர் காலத்தைப் பற்றியவையே.
1960களிலேயே சோழர் காலத்தை வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து அணுகி சோழர் ஆட்சியில் அறப்போர்கள் என்னும் நூலை நா. வான மாமலை எழுதினார். ஆ. சிவசுப்பிர மணியன், கோ. கேசவன் உள்ளிட்ட இடதுசாரி ஆய்வாளர்கள் இந்தப் பார்வையை வளர்த்தெடுத்தனர். மே. து. ராசுகுமார் சோழர்காலப் பொருளியல் என்னும் விரிவான ஆய்வு நூலை எழுதினார். இத்தகு ஆய்வுகளின் தொடர்ச்சி பிந்தைய ஆய்வு வட்டங்களிலும் அரசியல் விமர்சனக் கண்ணோட்டத்திலும் பிரதிபலித்தது. திமுகவால் ராஜராஜன் விதந்தோததப்பட்டபோது அதை விமர்சித்து எழுதிய இன்குலாப்பின் புகழ்பெற்ற கவிதையும் அரசியல் அமைப்புகளின் எதிர்ப்புங்கூட இப்போக்கின் தொடர்ச்சிகள்தாம்
மேற்கண்ட ஆய்வுப் போக்குகளில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும், மொத்தத்தில் சோழர் காலம் பற்றி முன்வைக்கப்படும் செய்திகளில் ஒத்த அம்சங்கள் உள்ளன. பிராமண மேலாதிக்கம், கோயில் சார்ந்த நிலவுடமை, இறுக்கமான சாதியப் பாகுபாடு, ஆகிய கூறுகள் வளர்த்தெடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது சோழர்களின் பொற்காலத்தில்தான். கோயில் நிறுவனமாக்கப்பட்டதன் விளைவாகப் பிராமணர்களின் அதிகாரம் முதன்மைப்படுத்தப்பட்டது என்கிறார் ஒய். சுப்பராயலு. இதன் தொடர்ச்சியாகவே வைதீக மயமாக்கமும் வடமொழிமயமாக்கமும் செல்வாக்குப் பெற்றதாகத் தெரிகிறது. ராஜராஜன் ஆட்சியில் ஆகமநியதி சாராத ஆலயங்கள் மங்க ஆரம்பித்தன என்றும் துல்லியமான ஆகமநெறிகள் பின்பற்றப்பட்டதும் அவன் காலத்தில்தான் என்றும் சுரேஷ் பி. பிள்ளை கூறுகிறார் (அக்டோபர் 2010 உயிர் எழுத்து). உண்மையில் சோழர்களின் கல்வெட்டுகள் யாவுமே ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களில் தான் இடம்பெற்றிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜராஜன் காலத்திற்குப் பின் கட்டப்பட்ட எல்லாச் சோழ ஆலயங்களுக்கும் ஈச்வரம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. வழிபாட்டிற்காக ஆலயத்திற்குள் நாயன்மார் சிலைகள் வைக்கப்பட்ட முதல் கோயில் ராஜராஜன் தன்பெயரில் எழுப்பிய ராஜராஜேச்வரமாக இருக்கலாம். ஆரியமயமாக்கப்பட்ட சமயமும் வேத பிராமணர்கள் வசித்த சதுர்வேதிமங்கலம் எனப்படும் கிராமங்களும் சோழ நாட்டில்தான் அதிகமாக இருந்தன. முன்னர் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதப் பெயர்களைச் சதுர்வேதிமங்கலங்களுக்குச் சூட்டுவதும் ராஜராஜன் காலத்தில் வழக்கமாக இருந்தது என்பன போன்ற பல தகவல்களை நிரல்படத் தொகுத்திருக்கிறார் சுரேஷ் பி. பிள்ளை.
தமிழ்ச் சமூகத்தின் தாழ்வுகளுக்கு முக்கியக் காரணியான சாதி உருவாக்கம் சோழர் காலத்திலேயே தொடங்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமண, பௌத்த சமயங்களை வெற்றிகொண்ட சைவம் அரச சமயமாக மாறிக் கோயில்களையும் கோயில் சார்ந்த நிலவுடைமையையும் கைக்கொண்டு பிராமணர்களையும் வேளாளர்களையும் உயர் சாதிகளாக்கி உழைக்கும் பிரிவினரையும் சேவைச் சாதியினரையும் தாழ்ந்த சாதிகளாக்கியது. சாதி வலுவடைந்தது சோழர் காலமே என்பதை ஏற்கும் ஒய். சுப்பராயலு “கல்வெட்டுகளில் சாதி முதல்நிலையில் தென்படுவது ராஜராஜன் காலத்தில்தான்” என்கிறார். சாதிகளுக்குரிய குடியிருப்பும் தொழில் பாகுபாடும் தூரப்படுத்தப்படுதலும் விலக்குதலும் துல்லியமாக்கப்பட்டு அதை நியாயப்படுத்துவதற்கான வைதீக ஆசியும் இலக்கியப் பிரதிகளும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. சோழர் காலத்தின் கூலி அடிமைகள் குறித்து நா. வான மாமலை விரிவாக எழுதியுள்ளார். ராஜராஜன் 400 தளிச்சேரி பெண்களை (நடன மங்கையரை) ராஜ ராஜேச்வரத்தில் குடியமர்த்தினான் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
இராஜராஜன் (985-1014) தன் தலைநகராகிய தஞ்சாவூரில் நான்கே ஆண்டுகளில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலைக் கட்டிமுடித்து கி.பி.1010இல் குடமுழுக்கு நடத்தினான் எனக் கூறப்படுகிறது. உண்மையில் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது குறித்தும் அதன் காலம் குறித்தும் நிலவும் முரண்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது குடமுழுக்கு நடந்ததாகக் கூறப்படும் கி.பி. 1010ஆம் ஆண்டின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுகின்றன.
2004 அக்டோபர் 10ஆம் தேதியிட்ட இந்து நாளிதழில் ‘தஞ்சைக் கோவிலில் பௌத்த சிற்பங்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் தியோடர் பாஸ்கரன் அவை தொடர்பாகச் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். சைவத் திருத்தலமான தஞ்சைப் பெரிய கோயிலில் பௌத்தச் சிற்பங்கள் இடம்பெற்றது எப்படி? சைவப் புராணங்களிலிருந்து பல காட்சிகளைக் காட்டும் சிற்பங்கள் கொண்ட இந்தக் கோயிலில் புத்தரைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இரண்டு இடங்களில் இருப்பது ஏன் எனும் கேள்விகளை எழுப்பி பெரிய கோவில் மூலக் கல்வெட்டுகளை ஆராய்ந்தவரும் Introduction to the Study of Temple Art (1976) என்னும் கோயிற்கலை குறித்த நூலை எழுதியவருமான சுரேஷ் பிள்ளை (1934 - 1998) இச்சிற்பங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கோயில் சிற்பங்களைக் குறியீடுகளாகக் கருதி விளக்கிய சுரேஷ் பிள்ளை தஞ்சைக் கோயிலின் புத்தர் சிற்பங்கள் பல முக்கியமான புதிர்களை உள்ளடக்கியிருப்பதாகக் கருதுகிறார். கருவறைக்குச் செல்லும் வழியில் தெற்கிலும் வடக்கிலுமாகச் செதுக்கப்பட்டுள்ள மூன்று சிற்பங்கள் மூலம் ராஜராஜேச்வரத்திற்கு முன் தஞ்சையில் புத்தரின் நிலை ஓங்கியிருந்ததாகவும் சிவன் கோயில் நிர்மாணிக்கப்படும் முன்னர் அங்கு புத்தரின் கோயில் இருந்திருக்கலாம் எனவும் கருதுகிறார்.
இன்றைய தஞ்சைக் கோயில் ராஜராஜனால் முழுமையாகக் கட்டப்பட்டதல்ல. விமானம், அதன் அடிப்பகுதி, முன்மண்டபத்தின் அடிப்பகுதி ஆகியவை மட்டுமே ராஜராஜனால் கட்டப்பட்டவை. விமானப் பகுதியினுள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ள 108 பரத நாட்டிய முத்திரைகளுள் 20 ராஜராஜன் காலத்தில் செதுக்கப்படவில்லை. கட்டடப் பணி பாதியிலேயே கைவிடப்பட்டு நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் முடிக்கப்பட்டது. ஆக ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் வேறு கோயில் இருந்துள்ளது. இதோடு தொடர்புடைய மற்றுமொரு சந்தேகத்தையும் சுரேஷ் பிள்ளை எழுப்புகிறார். ராஜராஜனின் மகன் ராஜ ராஜேச்வரத்தைக் கட்டி முடிக்காமல் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அங்கு புதியதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டது ஏன் என்பது அவர் கேள்வி. பௌத்தம் சோழநாட்டில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதும் அங்குதான் பௌத்தம் கீழிறக்கப்பட்டுச் சைவம் கோலோச்சியது என்பதும் பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்ட கருத்தாக இருக்கிறது. சோழர்களின் சைவச் சார்பை வைத்துப் பார்க்கும்போது பௌத்தக் கோயில்களின் இடத்தில் அவை அப்புறப்படுத்தப்பட்டு சைவக் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது. தஞ்சையைச் சேர்ந்த ஆய்வாளர் பா. ஜம்புலிங்கம் 67 புத்தர் சிலைகளைச் சோழநாட்டில் கண்டறிந்துள்ளார். அச்சிலைகளில் பெரும்பாலானவை சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன. பௌத்தம் கடுமையாக ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சைவ எழுச்சிக் காலத்தில் வைதீகமும் சாதியும் செல்வாக்குப் பெற்று அவற்றிற்குப் புறம்பான சமயத்தவர்கள் ஒடுக்கப்பட்டனர். பௌத்தத்தை இழிவுபடுத்தும் சைவ இலக்கியங்களும் இதையே உறுதிசெய்கின்றன.
வட இந்தியாவில் பௌத்தத்திற்கு எதிரான வைதீக எழுச்சியைப் போலவே தென்னிந்தியாவிலும் வைதீகமயமாக்கப்பட்ட சைவ எழுச்சியால் பௌத்தம் ஒடுக்கப்பட்டது. இதனூடாக உருவான சாதிய அமைப்பில் பிராமணர்களைப் போலவே பிராமணர் அல்லாத உயர்சாதியினரும் பயன்பெற்றனர். சோழர் காலச் சாதி அமைப்பை ஆராயும்போது பிராமணியத்தை மட்டுமல்ல அதைச் செயல்படுத்தியதிலும் பலன்பெற்றதிலும் பங்கு வகித்துவரும் பிராமணர் அல்லாத சாதிகளைக் குறித்தும் அறிய முடியும். பௌத்தத்திற்கும் பிராமணியத்திற்கும் இடையே நடந்த போராட்டம் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளும் வேத பிராமணியத்தை ஏற்க மறுத்த பௌத்தர்களே ஒடுக்கப்பட்டுப் பின்னாட்களில் தீண்டாதார் ஆக்கப்பட்டனர் என்கிற அயோத்திதாசரின் கூற்றும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.
ராஜராஜனின் ஆட்சிப் பரப்பின் பெருமை நிகழ்காலத் தமிழ்த் தேசிய கதையாடல்களோடும் இணைக்கப்படுகிறது. ராஜராஜன் காலத்தில்தான் வெற்றிபெற்ற நாடுகளின் மீது நேரடியான அதிகாரத்தைச் செலுத்துவதும் அந்நாடுகளைத் தன்னுடைய எல்லைக்குள் கொண்டுவரும் நடை முறையும் தொடங்கின என ஒய். சுப்பராயலு குறிப்பிடுகிறார். இது ராஜராஜனின் ஆட்சிப்பரப்போடு மட்டும் தொடர்புடையது அல்ல, அவன் பரப்பிய வைதீக நெறி, சைவ சமயம் ஆகியவற்றின் பரவலாக்கத்தோடும் தொடர்புடையது. ராஜராஜன் ஈழத்தின் பௌத்த அடையாளங்களை அழித்துச் சைவமாக்கினான் என்னும் செய்தியைத் தமிழ் வரலாற்று நூல்களே ஏற்கின்றன. ஈழத்தில் பௌத்தம் தமிழர்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது என்னும் வரலாற்றாளர் கா. இந்திரபாலாவின் கூற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டியது ஆய்வாளர்களின் பொறுப்பு.
சோழர் காலம் குறித்த ஆய்வுகளும் கோயில் குறித்த கேள்விகளும் அது பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள மிகுபுனைவுகளுக்கும் பொற்காலம் பற்றிய நிகழ்காலப் பெருமிதங்களுக்கும் எதிரானவையாயிருக்கின்றன.
இராமன் என்னும் இந்து அடையாளத்தை நிராகரிப்பதற்காகக் கருணாநிதி கூறும் அனைத்துக் காரணங்களும் ராஜராஜன் என்னும் தமிழ் அடையாளத்திற்கும் பொருந்தும். இந்து பெருங்கதையாடல்களுக்குள் மறைக்கப்பட்டுள்ளதைப் போலவே திராவிடத் தமிழ்ப் பெருங்கதையாடல்களுக்குள்ளும் சாதியம் முதலான தமிழ்ச் சமூகத்தின் முரண்கள் மறைக்கப்படுகின்றன. ‘திராவிடத்தைப் புறந்தள்ளிய ஆரிய நாகரிகம்’ பற்றிய குற்றச்சாட்டுகளைப் போலவே பௌத்தம் உள்ளிட்ட அவைதீக அடையாளங்களை அழித்த வைதீக ராஜராஜன் பற்றிய குற்றச்சாட்டுகளும் தமிழ்ப் பேரடையாளத்தால் மவுனமாக்கப்படுகின்றன.
பிராமணிய மேலாண்மைக்கு எதிரானது எனக் கூறிக்கொள்ளும் திராவிட இயக்கம் பிற்காலச் சோழர் காலம், சாதிய உருவாக்கத்தில் ராஜராஜனின் பங்கு ஆகியவை குறித்துத் திறந்த மனத்துடன் விவாதித்திருக்க வேண்டும், அவை குறித்த கற்பிதங்களை விமர்சனத்துக்குட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் திமுக என்னும் அரசியல் கட்சியின் அதிகாரத்தை நோக்கிய பயணத்துக்கு ராஜராஜன் போன்ற வரலாற்றுத் திருவுருக்கள் தேவைப்படுகின்றன. சோழர் காலம் குறித்த ஆய்வுகள் வெளிவரத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இவற்றின் வழியாகத் தன் வரலாற்றுப் பார்வையைப் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டிய திமுக தான் கட்டமைத்த பழைய எதிர்வுகளை மீண்டும் மீண்டும் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தனக்குக் கிட்டிய அதிகாரத்தையும் அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. திமுக நவீனப்பட்டிருக்கிறது என்பது ஒரு பொய்யான தோற்றம். சமூக முரண்பாடுகளைத் தந்திரமான முறையில் ஓட்டு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதில்தான் அதன் கவனம் குவிந்திருக்கிறதே அல்லாமல் அதற்கான தீர்வுகளைத் தேடுவதில் அல்ல. சமூக அடுக்குகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அது கண்டுகொள்வதே இல்லை. அதற்கு மாறாக அவற்றை மறைக்கவும் மறுக்கவும் மட்டுமே முனைகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கி ராஜராஜனுக்கு நடத்திய பெருவிழா வரை கடந்த சில பத்தாண்டுகளில் கருணாநிதியால் நடத்தப்பட்ட பண்பாட்டு அரங்குகளில் நவீனத்துவச் சிந்தனைகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்குச் சான்று. பகுத்தறிவையும் சுயமரியாதையையும் வலியுறுத்திய போதிலும் திராவிட இயக்கத்தின் உள்ளீடாகச் சைவத் தமிழ் அடையாளமும் சைவக் கறை படிந்த தமிழ் வரலாறும் தான் இருக்கிறது என்பதே உண்மை.
அதிகாரத்தை ஈட்டித்தந்த அடையாளங்களைத் தொடர்ந்து காப்பாற்றுவதும் அவற்றின் மீதான விமர் சனங்களை மறுப்பதும் புறக்கணிப்பதும் இறுதியில் அழித்தொழிப்பதும் அதிகாரத்தின் செயல்பாடு. அதைத்தான் திமுக செய்துகொண்டிருக்கிறது. ராஜராஜனே கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட அடையாள அரசியல் உருவாக்கத்தின் முன்னோடி. தன் பெயரில் கோயில்களைக் கட்டுதல், அரசின் திட்டங்களுக்குத் தன் பெயரைச் சூடிக்கொள்ளுதல், அறிஞர்களுக்கும் புலவர் பெருமான்களுக்கும் தன் பெயரில் விருது வழங்குதல், சிலையெழுப்புதல், உரையெழுதுதல் போன்ற செயல்பாடுகள் ராஜராஜனுக்கும் கருணாநிதிக்கும் பொது. புதிய சட்டமன்றக் கட்டடம், உலகத் தரத்திலான நூலகம், செம் மொழி மாநாடு, பூங்காக்கள், பாலங்கள் ஆகியவை கருணாநிதியின் தனிச் சிறப்பான சாதனைகள். கடவுளாக்கப்பட்டிருக்கிற ராமன் போன்ற புனிதங்களோடு சாதியத்தையும் வைதீகத்தையும் அதிகாரத்தின் பகுதிகளாக மாற்றிய ராஜராஜன் போன்ற அடையாளத் திருவுருக்களையும் அவை சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களையும் கேள்விக்குள்ளாக்காமல் நிகழ்கால நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதே யதார்த்தம்
Subscribe to:
Posts (Atom)
வெங்கட் சாமிநாதன்