free counters

Saturday, November 27, 2010

நாம் அமைதியாக இருப்பது ஏன்? மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள்
[ சனிக்கிழமை, 27 நவம்பர் 2010, 09:22.41 AM GMT +05:30 ]
தமிழீழ தேசிய மாவீர தினத்திற்காக விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.
மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள்.
எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,

வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது.

படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.

இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,

சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.

நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.

ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.

இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Wednesday, November 10, 2010

இதுதாண்டா போலீசு

http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/


Raga - சென்னை,இந்தியா
2010-11-09 12:36:26 IST
To Coimbatore Police comissioner: Thanks for saving our Tax payers money and saving time of our judicial system for this kind of criminal activities. அவனை விவேக் ஒரு படத்தில் மைனர் குஞ்சுவை சுட்டது போல் சுட்டிருக்க வேன்டும்! இது மாதிரி விரைந்து தீர்ப்பு அளித்தால் நாட்டில் இது மாதிரியான குற்றங்கள் குறையும்! ஊழல், அக்கிரமும் செய்யும் அரசியல் வாதிக்களுக்கும், அரசாங்க வேலை யாட்ட்களுக்கும் இது மாதிரி உடனடி தண்டனை குடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்!!…
தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-09 12:35:03 IST
இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமையான உணர்வுகளின் வெளிபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெல்க நியாயம் வளர்க மக்களின் ஒற்றுமை ஓங்குக நமது காவல்துறையின் பணி. சிறப்பான இந்த காரியத்தை செய்து முடித்த நமது காவல்துறைக்கும், நமது முதல்வர் மு.க அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி……..
ஷபீர் - manama,பஹ்ரைன்
2010-11-09 12:33:03 IST
தமிழக அரசு , திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் என் மணமாந்த வாழ்த்துக்கள்!!!. எது எதுக்கோ பரிசு வழங்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு பாரத ரத்னா போன்ற விருந்துகள் வழங்க வேண்டும்….
Krishnas - nj,யூ.எஸ்.ஏ
2010-11-09 12:28:42 IST
“போலிசே தண்டனை கொடுத்தால் சட்டம் என்ன ஊறுகாய் போடவா இருக்கிறது” இது சில மேதாவிகளின் கேள்வி இங்கு. இந்த மாதிரி குழந்தைகளை கடத்துவது, கொல்வது, கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு எதற்கு சட்ட உதவி. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகவேண்டும். அந்த மிருகங்களை குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் அந்த இடத்திலயே கொன்று விடவேண்டும்…..
Kumaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:27 IST
இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி உயிரோட இருக்கு…தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க…. அடி பட்ட போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்…….
Sankaran - chennai,இந்தியா
2010-11-09 12:18:17 IST
அது தான் ஐநூறு பேர் போலிசை பாராட்டியிருக்கிரார்களே என்று கருத்து எழுதாமல் இருக்காதீர்கள். ஐந்தாயிரம் பேர் எழுதினாலும் குறைவு தான். வெள்ளைக்காரனின் துருப்பிடித்த சட்டங்களை கட்டிக்கொண்டு அழும் அறிவுஜீவிகளுக்கு சாதா இந்தியனின் ஆத்திரமும் குமுறலும் என்று தான் புரியுமோ? கசாபுக்கும் இந்த முடிவு எப்போது என்று ஏங்கும் கோடானு கோடி இந்தியர்களின் சார்பாக,…
____________________________________________________________
இவை தினமலருக்கு வந்துள்ள 1000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் சில. கோவை முழுவதும் மார்வாடி சேட்டுகள் இனிப்பை வழங்கி பட்டாசுகளையும் அள்ளி தருகிறார்கள். சேட்டுகளின் தயவில் கோவையே சமூக தீபாவளியை கொண்டாடி வருகிறது. தமிழ் பதிவுலகிலும் அதே மனநிலைதான்.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மோகன்ராஜ் போலீசை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசு சுட்டதில் மோகன்ராஜ் செத்துப்போய்விட்டதாகவும் போலீசு கொடுத்துள்ள செய்தி கடைந்தெடுத்த பொய் என்பதை 1000 பின்னூட்டக்காரர்களும் அடித்துச் சொல்கிறார்கள். இருந்தபோதிலும் “பொய் வாழ்க, போலீசு வாழ்க, கொலை வாழ்க! ஜெய்ஹிந்த்!” என்று கருத்துக் கூறி முடித்திருக்கிறார்கள்.
வாசகர்களுடைய தர்ம ஆவேசம் தாங்க முடியவில்லை. இப்படி அறவுணர்ச்சி பொங்கி வழியும் தமிழகத்திலா லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது, பொதுச்சொத்துக்கள் கொள்ளை போகின்றன? இந்த தமிழ்நாட்டில்தானா சில போலீசுகாரர்கள் டூட்டி முடிந்தபின் மப்டியில் வந்து திருடுகிறார்கள், பல போலீஸ்காரர்கள் யூனிபார்மிலேயே திருடுகிறார்கள்..? நம்பமுடியவில்லை.
இருந்தாலும் ஒரு கேள்வி. ஒருவேளை… ஒருவேளை மட்டும்தான், மோகன்ராஜ் என்ற நபர் அப்பாவியாக இருந்து, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவர்கள் சேட்டுடைய சொந்தக்காரப் பையன்கள் என்ற சேதி கொஞ்சநாளைக்குப் பின்னர் வெளிவந்தால்? சில நாட்களுக்கு முன் சென்னையில் சிறுவனைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அவனது சொந்தக்கார இளைஞர்கள், ஹை டெக் கிரிமினல்கள். கேட்ட பணத்தைக் கொடுப்பது போலக் கொடுத்து பின்னர் அவர்களை மடக்கிப் பிடித்தது போலீசு என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அதனால்தான் ஒரு சந்தேகமும் வருகிறது.
“இப்படி பணத்தைக் கொடுத்து குற்றவாளியைப் பிடித்திருப்பது போலீசு துறைக்கே அவமானம்” என்றும், “மைனாரிட்டி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் யோக்கியதை இதுதான்” என்றும் மறுநாள் ஜெயலலிதா விட்ட அறிக்கையையும் படித்திருப்பீர்கள்.
சட்டமன்றம் வேறு கூடவிருப்பதால், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை” என்று ஆத்தாளுக்கும் மக்களுக்கும் நிரூபிக்கும் விதத்தில், உடனே “கிடா வெட்டி பொங்கல் வைக்குமாறு” போலீசுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கோவை போலீசுதான் “சேச்சே.. அப்படியெல்லாம் உடனே சுட்டுக்கொல்வது ஐ.பி.எஸ் பதவிக்கு அழகு இல்லீங்கய்யா, ரெண்டு நாளாவது போகட்டும்” என்று கூறி, கிடாவெட்டினை தள்ளி வைத்து நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. எப்படியோ, மோகன்ராஜ் என்ற நபருக்கு “எமன்” ஜெயலலிதா உருவில் வந்திருக்கிறான்.
ஜெயலலிதா மட்டும்தான் எமன் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை திமுகவின் காலை நக்கிப் பிழைத்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கள் “வலிமை”யை கருணாநிதிக்குப் போட்டுக் காட்டும் பத்திரிகைகளும், கருணாநிதி என்னதான் அள்ளிக் கொடுத்தாலும் “தானாடாவிட்டாலும் தசையாடும்” என்று இனப்பாசத்துடன் அம்மாவின் அறிக்கைகளை 5 ஆம் பக்கத்திலிருந்து முதல் பக்கத்துக்கு கொண்டுவந்திருக்கும் பார்ப்பன நாளேடுகளும் கூடத்தான் இந்த என்கவுன்டரில் பங்கேற்றிருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தர்மாவேசம்தான், இந்தக் கொலையை ஒரு திருவிழாவாக கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தயார்படுத்தியிருக்கிறது.
கும்பலோடு சேர்ந்து கொண்டு தர்ம அடி போடும் “வீரர்கள்” அடிவாங்குபவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக தினமலர் பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.
“பாலியல் வன்முறை நடந்திருப்பதாக பிரேத பரிசோதனை கூறுகிறது” என்று போலீசு சொல்கிறது. ஆனால் குழந்தைகளை கடத்தியவர்கள் “பணத்துக்காகத்தான் கடத்தினார்கள்” என்பது கூட இதுவரை உறுதியானதாகத் தெரியவில்லை. பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.
ஆனால் அந்தக் கொலை ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலையா (murder for gain), ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலையா, அவசரத்தில் செய்யப்பட்ட கொலையா என்பதைப் பொறுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரித்துச் செல்லும். “எதற்காக கொன்றார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையா, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை… ” என்று முழங்குகிறார்கள் தினமலர் பின்னூட்டக்காரர்கள்.
அதுதான் நீதி என்றால், இதே போன்றதொரு என்கவுன்டரில் ஜெயேந்திரரை அன்று ஆந்திரா பார்டரில் வைத்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே! அந்தக் கிரிமினலின் கையால் வழங்கப்பட்ட ஒண்ணரை கிலோ எடையிலான தங்க கிரீடத்தை தலையில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலையநிலிருந்து வெங்கடாஜலபதி பெருமாளும் தப்பியிருப்பாரே! கோவை என்கவுன்டரை ஆதரிப்பவர்கள் அப்படி ஒரு ஆந்திரா என்கவுன்டர் நடந்திருந்தால் அதனை ஆதரித்திருப்பார்களா?
அன்று “ஹ்யூமன் ரைட் வயலேஷன், மிஸ்யூஸ் ஆஃப் பவர், ஹாரஸ்மென்ட்” என்று பல மாமாக்களும் மாமிகளும் டிவிக்களில் பேட்டி கொடுத்தார்களே! “இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல்தான் சுனாமியே வந்தது” என்று கூட சென்னை அயோத்தியா மண்டபத்தின் பக்கம் பேசிக்கொண்டார்களே! அன்று சென்னை உயர்நீதி மன்றம் விடுமுறை நாளில் சங்கராச்சாரியின் பெயில் பெட்டிசனை விசாரித்ததே, பெரியவாளை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஜட்ஜ் பங்களாவிலேயே ரிமாண்டு பண்ண முடியுமா என்று ஒரு மாட்சிமை தங்கிய நீதிபதி அரசு வக்கீலிடம் கேட்டாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா?
“இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி” என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான சேட்டுகள். வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சங்கரராமனை ஆள் வைத்துப் போட்டுத்தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியவாளையும் அன்றைக்கே போட்டுத்தள்ளியிருந்தால், சங்கரராமனின் மனைவியும் அன்று தீபாவளி கொண்டாடியிருப்பாரே! பாண்டிச்சேரிக்கு கேசை மாற்றி, இழுத்தடித்ததனால்தானே இன்றைக்கு சங்கரராமனின் ஆவியைத் தவிர எல்லா சாட்சிகளும் பல்டியடித்து விட்டார்கள்?
இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே கோவை நகரில் போலீசுக்காரர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணிக் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களில் ஒருவருக்கு கூட இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பதிலுக்கு குண்டு வைத்த அல்உம்மாக் காரர்கள் மட்டுமின்றி பல அப்பாவிகளும் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
“குஜராத் படுகொலையை எப்படி நடத்தினோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம்” என்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோவையே தெகல்கா வெளியிட்டதே.. அதன் பிறகு எத்தனை ஆர்.எஸ்.எஸ் காலிகள் என்கவுன்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்கள்? ரதயாத்திரையில் தொடங்கி மும்பை படுகொலை வரை கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் உயிர்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தற்போது ஆஜ்மீர் முதலான பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களே சங்க பரிவாரத்தினர்தான் என்று குட்டு உடைந்தவுடன், “அரசியல் பழிவாங்கல்” என்று அவர்கள் ஏன் அலறுகிறார்கள்? அதைக் கேட்டு நமக்கு ஏன் கோபம் வரவில்லை?
“இப்படித்தான் கசாப்பையும் போட்டுத்தள்ளவேண்டும்” என்று பின்னூட்டம் போடுகிறவர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இப்படித்தான் போட்டுத்தள்ளவேண்டும்” என்று ஏன் சொல்ல மறுக்கிறார்? அலகாபாத் தீர்ப்பு வந்தவுடன், “கடந்த காலக் கசப்புகளையெல்லாம் மறந்து விடுங்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்கிறாரே பகவத், அதை பெருந்தன்மை என்று பாராட்டுகின்றனவே பத்திரிகைகள், அதையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது? அதே மாதிரி ஒரு அறிவுரையை சொல்லும் உரிமை கசாப்புக்கு கிடையாதா? மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ கிடையாதா?
1984 இல் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக “விதவை விகார்” என்று குடியிருப்பே கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே, அந்த விதவைகள் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது? தண்டகாரண்யாவிலும் காஷ்மீரிலும் நடக்காத பாலியல் வன்முறையா, படுகொலையா? “இந்தியாவிலிருந்து விடுதலை” என்று காஷ்மீரே இன்று கையில் கல்லை எடுத்துக்கொண்டு நிற்கிறதே இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? இந்திய இராணுவமல்லவா?
“போலி என்கவுண்டரில் தங்களை பிள்ளைகளை போட்டுத் தள்ளிய இந்திய இராணுவத்தினரை பதிலுக்கு என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும்” என்று காஷ்மீர் மக்கள் கோரவில்லை. மனித உரிமை அமைப்புகளும் கோரவில்லை. “எல்லோரையும் போல அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்” என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. “எத்தனை கொலை செய்தாலும், வன்புணர்ச்சி செய்தாலும் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடாது” என்று இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள்தான் மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரத்துக்குப் பெயர்தான் “ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசன் பவர் ஆக்ட்”. கொல்லவும், வல்லுறவு கொள்ளவுமான “ஸ்பெஷல் பவர்”!
“இராணுவத்திற்கு கொடுத்திருக்கும் அப்படிப்பட்ட ஸ்பெஷல் பவரை எங்களுக்கும் கொடுங்கள்” என்பதுதான் போலீசின் கோரிக்கை. அதைத்தான் தினமலரின் பின்னூட்டக்காரர்கள் வழிமொழிகிறார்கள். வழக்குகளோ வாய்தாக்களோ இல்லாமல் வாச்சாத்தி, பத்மினி, ரீட்டா மேரி, அந்தியூர் விஜயா .. என்று லாக் அப்பை லாட்ஜாகவும், தூக்குமேடையாகவும் மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தைத்தான் போலீசு கேட்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் அந்த அதிகாரத்தை, அதிகார பூர்வமாக, சட்டப்படியே வழங்க வேண்டும் என்பதுதான் போலிசின் கோரிக்கை.
தா.கிருஷ்ணனைக் கொன்ற கொலைகாரர்கள், மதுரை தினகரன் ஊழியர்கள் மூவரைக் கொன்ற கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதற்காகவா இந்த அதிகாரத்தைக் கேட்கிறது போலீசு?
சென்னையில் ஒரு சரிகா ஷா என்ற பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியானவுடன் மீடியாவும் அரசும் கொந்தளித்தன. உடனே ஈவ் டீசிங்கிற்கு சட்டமெல்லாம் வந்துவிட்டது. இப்போது கோவை கடத்தல் கொலை நடந்தவுடனே என்கவுன்டரைச் சட்டமாக்கச் சொல்கிறார்கள் தினமலர் ரசிகர்கள். பணக்காரனும், பார்ப்பன மேட்டுக்குடியும், சேட்டுகளும் பாதிக்கப்பட்டால்தான்  இவர்களிடம் மனிதாபிமானம் கொப்புளித்து எழும் போலும்!
மேலவளவு படுகொலை நடந்தபோது இப்படியொரு தார்மீக ஆவேசத்தை நாம் மீடியாக்களில் பார்க்கவில்லையே! அந்த வழக்கில் “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பலரும் கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டியவர்களே” என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பின்னரும், அவர்களை தண்டிப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் முயலவில்லையே, அதையெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லையே! தற்போது பெண்ணாடம் மாணவன் பாரத் கொலை பற்றியும் வினவு தளத்தில் எழுதியிருக்கிறோம். அதனைப் படித்து வாசகர்களோ, பதிவுலகமோ பொங்கி எழவில்லையே!
சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் என்று கூறிக்கொண்டு தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறிக் குற்றங்களையும் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் கொங்கு மண்ணில்தான் இன்று தரும ஆவேசம் தலைவிரித்து ஆடுகிறது. என்கவுண்டருக்கு ஆதரவாக வெடி வெடிக்கிறார்கள். “என்” கவுண்டரோ, “உன்” கவுண்டரோ, யாராயிருந்தாலும் “நம்” கவுண்டர்தானே என்றுகூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.
கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?
தினமலர் தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?
பலான படங்களைக் காட்டியே ஹிட்ஸை அதிகரித்துக் கொள்ளும் தினகரன் வெப்சைட் பாலியல் குற்றம் பற்றி மூச்சு விடலாமா? அல்லது தங்கள் திருக்குவளை குடும்பத் தகராறுக்கு “தினகரன் குடும்பத்தை” சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேரை காவு கொடுத்துவிட்டு, அப்புறம் மாமாவும் மச்சானும் சமரசமாகி, மந்திரியாகிக் கொண்ட கும்பலுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேசும் அருகதை உண்டா?
பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?
கேட்டால், “நாங்கள் எல்லா என்கவுன்டரையும் ஆதரிக்கவில்லை. சின்னஞ்சிறுவர்களைக் கொலை செய்த கொலைகாரர்கள் என்பதனால், இந்த என்கவுன்டரை மட்டும்தான் ஆதரிக்கிறோம்” என்று ஜகா வாங்குவார்கள். சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான். இந்த விசயத்தில் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்.
“உணவுக்கிடங்குகளில் மக்கிமடிந்தாலும் அந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகத் தரமாட்டேன்” என்று கூறும் பிரதமரின் இரக்கமின்மையையும், கோவைக் கொலைகாரனின் இரக்கமின்மையையும் நாம் ஒப்பிட்டுப் பேசினால் அதை இந்தப் படித்தவர்களின் மனம் ஒப்புமா? நிச்சயம் ஒப்பதாது. “அதெல்லாம் குதர்க்கவாதம். மன்மோகன்சிங் சொல்வது ‘மாக்ரோ’ பாலிசி டெசிஷன். இது ‘மைக்ரோ’ அச்சாசினேஷன். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?” என்று கேள்வி எழுப்புவார்கள்.
கொலையில் கூட பணக்காரன் ஏழை வித்தியாசம் பார்ப்பது வக்கிரமானது என்று சாடுவார்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று வசை பாடுவார்கள். அப்படி வித்தியாசம் பார்த்து ஏழைக் குழந்தைகளின் சாவை அலட்சியப்படுத்துவதும், பணக்காரக் குழந்தைகளின் சாவுக்கு குடம் குடமாய் கண்ணீர் விடுவதும் யார் என்பதை அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.  அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
மோகன்ராஜ் என்பவன் கேடியா, கிரிமினலா எங்களுக்குத் தெரியாது. அவன் எவனாக வேண்டுமானால் இருக்கட்டும். நீதிக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, பட்டினியால் செத்து மடிகிறார்களே அது குறித்துத்தான் நாம் முதன்மையாக கவலைப்படவேண்டும். இப்படி எவனோ ஒருவன் சாவது குறித்து எங்களுக்கு விசேடக் கவலை ஒன்றும் இல்லை.
இப்பிரச்சினையில் கவலைக்குரிய விசயம் ஒன்றுதான். கோவை சம்பவத்தை முன்வைத்து தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது, 1980 களில் வெளிவந்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படத்தின் ரீ மிக்ஸ். ஏற்கெனவே தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் போலீசுக்கு, “விசாரணையே இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தையும் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.
மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, November 2, 2010

இது பச்சையான படுகொலை

http://www.vinavu.com/2010/11/01/nokia-murders/


காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை எனும் ஊரைச் சேர்ந்தவர் அம்பிகா. வயது 23 இருக்கலாம். பெற்றோருக்கு மூத்த பிள்ளை, ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். வரும் ஜனவரி 8 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுங்குவார் சத்திரத்தில் இருக்கும் நோக்கியா ஆலையில் கடந்த முன்று வருடங்களாக அம்பிகா வேலை செய்கிறார். நேற்று இரவு அவர்,ஆலையில் கொடுரமாக இறந்து போயிருக்கிறார். எனினும் இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து முடிப்பதற்கு வேலை செய்து வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய வேண்டும். செய்கிறார்கள்.
சென்னை நோக்கியா ஆலையில் ஏ,பி,சி எனும் மூன்று ஷிப்ட்டுகளிலும் தலா ஒன்று முதல் இரண்டு இலட்சம் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடி தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விட கொடூரமான மேலாள நிர்வாகிகள் அங்கு இருக்கின்றனர்.
நேற்று இரவு (31.10.2010) பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்கிறார். அவரது யூனிட்டின் பெயர் “இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி” என்று சொல்கிறார்கள். இங்கு “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.
ஆனால் இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா?
எந்திரத்தில் சில ஃபோர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஏழுமணிக்கு அப்படி விழுந்துவிட்ட ஃபோர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.
கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.
ஆனால் அங்கிருந்த சூபர்வைசர் வெற்றி தேவராஜ் மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அந்த எந்திரம் இரண்டு கோடி ரூபாய் விலை உள்ளது என்றும் அதை பொறுமையாக டூல்சை கொண்டு படிப்படியாக கழட்டலாம் என்று அவர் சொல்லிவிட்டு எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால் அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை.
இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். இப்போது மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன்.
ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார். அதற்குள் அவர் உயிர் பிரிகிறது. பின்னர் அவரை கே.எம்.சி, அப்பல்லோ என்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் கூற்றுப்படி அம்பிகா அதற்கு முன்னரே இறந்து போயிருக்கிறார்.
ஆலைக்குள் வரும் தொழிலாளிகள் எவரும் தமது செல்பேசிகளை பணியிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. “அசம்பிள் டூ ஆர்டர் செக்ஷன்” எனும் பிரிவின் சூபர்வைசர் ஜே.புருஷோத்தமன் அம்பிகாவின் மரணத்தை மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற பணித்திருக்கிறான். அம்பிகாவுக்கு ஒன்றுமில்லை, இரத்தம் ஏற்றுகிறார்கள், எல்லாரும் வேலையை தொடருங்கள் என்றும் கூறியிருக்கிறான். இவன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதே.
பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் வழியாக அம்பிகாவின் மரணச் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி நிர்வாகத்தால் அல்ல. அம்பிகாவின் மரணம் இரகசிய செய்தியாக கசிந்த பிறகே நிர்வாகம் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.
மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை தந்துவிட்டால் தங்களது மகளின் உயிர் திரும்ப கிடைக்குமா என்றும் அவர்கள் ஆவேசப்படுகிறார்கள்.
ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்னர் நோக்கியாவில் தொழிற்சங்கத்தின் மூலம் நிர்வாகத்தின் சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் ஈவிரக்கமின்றி ஒடுக்கிய நிர்வாகம் 100 மில்லியன் இலக்கு வெறிக்காக கொடுரமான வேலை முறையை கையாண்டிருக்கிறது.
கட்டிங் மிஷினுக்குள் விழுந்துவிடும் ஃபோர்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று தொழிலாளிகளுக்கு அறிவித்திருந்தால் அம்பிகா கொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 மில்லியன் இலக்கை அடையமுடியாமல் போயிருக்குமே?
எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரண்டு கோடி நட்டமாயிருக்குமே, அதற்கு என்ன செய்ய முடியும்? கட்டிங் இயந்திரத்தின் சென்சார் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே, அதற்கு என்ன செய்வது?
100 மில்லியன் இலக்கை அடைய வேண்டுமென்றால் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததினால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.
கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், அறிவித்தாலும் அபயாத்தோடு கையை விட்டு விழும் போர்டுகளை எடுப்பது என்று பின்னர் இயந்திரத்தை உடைக்க கூடாது என்று தடை போட்டு, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அம்பிகா கொடுரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.
சன் டி.வியில் ஒரு ஒற்றை வரி செய்தியோடு இந்த படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்கு சென்ற வினவு செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் நோக்கியா விளம்பரம் கல்லா கட்டுகிறது என்ற உண்மை காரணமாக அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தொழிலாளிகளிடையே பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக போலீசு பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பிகாவின் கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் முயல்கிறார்கள். போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று திகைத்திருக்கிறார்கள். அம்பிகாவின் உடல் அப்பல்லோவின் சவக்கிடங்கில் இருக்கிறது.
அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சிலாகிப்பார்கள்